மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள 5 லட்சம் செங்கரும்புகளை இடைத்தரகர்கள் இல்லாமல் அரசு நேரடியாக கூட்டுறவு துறை மூலமாக கொள்முதல் செய்ய வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா மாவட்டத்தின் கடைகோடி மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் இருந்து வருகிறது. இங்கு மீன் பிடி தொழிலும், விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இப்பகுதி மக்கள் பெருமளவு ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நெல், பருத்தி மற்றும் கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, காத்திருப்பு, செம்பதனிருப்பு, அல்லிவிளாகம், ராதாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொங்கல் கரும்பு சுமார் 200 ஏக்கரில் ஐந்து லட்சம் கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளது. இடையில் மழை, பலத்த காற்று காரணமாக கரும்பு சாய்ந்த போது அதனை விவசாயிகள் கட்டி காப்பாற்றியும், காட்டுப்பன்றிகள் தாக்குதல் என பல்வேறு போராட்டத்தின் மத்தியில் தற்போது கரும்புகள் நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. ஆட்கள் சம்பளம், உரங்களின் விலை உயர்வு என ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.
இந்த சூழலில் பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் குடும்ப கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கருப்பையும் சேர்த்து வழங்குவதாக தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. இதற்கு தமிழக அரசுக்கு கரும்பு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கரும்பை பெற்று ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்கப்பட்டது. இதற்காக முழு கரும்பு ஒன்றுக்கு அரசு 33 ரூபாய் விலை நிர்ணயம் செய்த நிலையில், இடைத்தரகர்கள் கரும்புக்கு 15 ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ள தொகையை கமிஷனாக பெற்று சென்று விட்டனர்.
Actor Vijay Attacked: விஜய் மீது காலணி வீசிய நபர் குறித்து போலீசில் புகார்
இதற்கு எதிராக மயிலாடுதுறை அருகே வானாதிராஜபுரம் பகுதியில் கரும்பை கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராடிய காரணத்திற்காக அந்த கிராமத்தை மொத்தமாக புறக்கணித்து, கரும்பு கொள்முதல் செய்யப்படவில்லை. இதற்காக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கரும்பு விவசாயிகளிடம் பாகுபாடு இன்றி, உரிய விலை கொடுத்து கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த ஆண்டு அரசு பொங்கல் பரிசு தொகுப்பிற்கு கொள்முதல் செய்யும் கரும்பை இடைதரகர்கள் மூலமாக கொள்முதல் செய்யாமல் அரசு நேரடியாக கூட்டுறவு துறை மூலமாக கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு கொள்முதல் செய்யாவிட்டால் கரும்பு விலை வீழ்ச்சி அடைந்து இந்த ஆண்டு பெரும் நஷ்டம் ஏற்படும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.