மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் மஜித்காலனியை சேர்ந்தவர் 52 வயதான சலாஹுதீன். பாங்காக் தொழிலதிபராக இருந்து வரும் இவர் விவசாயம் மற்றும் இயற்கை மீது கொண்ட பற்றால், நீடூர் மற்றும் பாண்டூர் கிராமங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு படிப்படியாக நிலங்களை வாங்கியுள்ளார். அதில் நெல் விவசாயம் செய்வதை விரும்பாத அவர் ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் மரம், பழவகைகளை வளர்க்க வேண்டுமென்று எண்ணியுள்ளார்.  அதனைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருக்கக்கூடிய மரம், பழவையான மரங்களை நமது மண்ணில் வளரவைத்து தமிழகத்தில் எந்த வகையான மரங்கள், கனிகளையும் உற்பத்தி செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு




சுமார் 65 ஏக்கர் நிலத்தினை வாங்கி அதில் பண்ணைகுட்டை அமைப்பதுபோன்று வயலில் ஆங்காங்கே கால்வாய் போன்று மேடு, பள்ளம் தண்ணீர் நிற்கும் வகையில் வடிவமைத்து மேடான பகுதிகளில் மரவகைகளும், பள்ளத்தில் தண்ணீர் தேக்கி மீன்வளர்ப்பு பணியை தொடங்கி, தேக்கு, மா, பளா, வாழை, தென்னை, பனை, சீத்தாமரம், பம்பிளிமாஸ், முந்திரிமரம், பாதாம்மரம், பாக்கு, என்று இந்த பகுதி மரங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள மங்குஸ்தான், ஜம்புருட்டான், ரம்புருட்டான், டயாமவுன்ட், பெரிஸ், மகாகனி, செம்மரம், சந்தனமரம், கொடுக்காபுளி, ஆம்பிள், சாத்துக்குடி, அத்தி, ஆரஞ், ரெட்ரோஸ், கொக்கோசாக்லெட் மரம், யானைபிடுக்கு மரம் உட்பட அழிந்துவரும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் என 500 -க்கும் மேற்பட்ட மரம், பழவகை மரங்களை செடிகளாக வாங்கிவந்து முற்றிலும் இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்து வருகிறார். 




மேலும் இயற்கை மூலிகை செடிகளான பெரியாணங்கை, சிறியா நங்கை, கருநொச்சி, மலைவேம்பு, யானை நெருஞ்சி, பிரண்டை, மிளகு, திப்பிலி, வாசனை பட்ட வகை உள்ளிட்ட செடிகளும், மருத்துவ குணம் கொண்ட அரிய வகை கிழங்குகளான ஆட்டுக்கால் கிழங்கு, சிறு கிழங்கு, செரிக் கிழங்கு, காவலி கிழங்கு, முடக்குகிழங்கு, செவ்வாரி கட்டக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு கிழங்கு வகையிலும், மேலும் அதிக ஆக்சன் தரக்கூடிய உள்நாட்டு மரமும் வெளிநாட்டு மரக்கன்றுகளும் மொத்தம் ஒன்றரை லட்சம் மரக்கன்றுகளை வளர்தது வருகிறார். நீடூர், பாண்டூர், பொன்னூர், புத்தகரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள பனை மரங்களை மீட்டெடுத்து அவைகளை பாதுகாத்து வருகிறார். 




மேலும் பனை மரங்களை அழிக்க வேண்டாம் அவை பூமிக்கு நல்ல மழை பொழியும் போது நிலத்தடி நீர்மட்டத்தை குறையாமல் நீர்களை தனது வேர்களால் தாங்கிப் பிடித்து கொள்ளும் ஒரு அற்புதமான மரம் அதை பாதுகாத்து வளர்த்திட வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்து வருகிறார். இதுகுறித்து சலாஹுதீன் நம்மிடம் கூறுகையில், “நீடூர் மற்றும் பாண்டூர் கிராமத்தில் 65 ஏக்கர் பரப்பளவில் நிலத்தை தேக்கு, மகாகனி, சந்தனம். ரோஸ்உண்டு, மலைவேம்பு இதுமாதிரி பயிர்களை சாகுபடி செய்தேன். மற்ற பகுதிகளில் மழைபெய்வதை விட இந்த பகுதியில் மழை சற்று அதிகமாக இருக்கும் வெயில் நாட்களில் வெப்பம் குறைவாகத்தான் இருக்கும். எப்பொழுதும் இந்த பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டு பசுமையாக இருக்கும், மக்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அதிக மரங்கள் வளர்க்க வேண்டுமென்ற ஆசையில் வளர்த்து வருகிறேன்.




அதிக செலவு செய்துதான் பயிரிட்டுள்ளேன், 30 ஆண்டுகளுக்கு பிறகுதான் பலன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். செலவை பற்றி கவலைப்படாமல் தோட்டத்திற்கு வந்து சென்றாலே மகிழ்ச்சி அளிக்கிறது. அதிக மரம் வளர்ப்பதால் மழை பெய்கிறது. மரம் வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். காடுகளைச் சுற்றி ஆங்காங்கே விளம்பர பலகை அமைத்து மரம் வளர்ப்போம், மழை நீர் பெறுவோம், மண்வளம் காப்போம், மரம் வளர்த்தால் சுத்தமான காற்று கிடைக்கும் என்ற பல்வேறு பழமொழிகளை எழுதி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். தற்போது 1 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளது.




தேக்கு, மகாகனி, பழவகை மரங்கள் வைத்துள்ளேன். கேன்சர் நோய்க்கு உள்ள முள்ளுசீதா மரம், யானையத்தி, கொடுக்காப்பள்ளி உட்பட பல்வேறு வகையான மூலிகை மரம் மற்றும் பழவகை செடிகள் வைத்து வளர்தது வருகிறோம். ஆஸ்மா நோயாளிகளுக்கு பயன் அளிக்கக்கூடிய யானைபிடிங்கி மரம் வளர்தது வருகிறேன். பொதுமக்கள் மரங்கள் அதிக அளவில் வளரத்து இயற்கையை போற்றி பாதுகாத்தால் தான் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமலும், பூவி வெப்பமாவதை தடுப்பதற்கு மரங்கள் வளர்க்க வேண்டும் அதனை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கோடு இந்த மழை காடுகளை வளர்த்து வருகிறேன்” என்றார். மேலும் இவரது காடுகளில் காலைப் பொழுதில் பல்வேறு வகையான பறவைகள், வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்வதாகவும் பறவைகளின் எச்சம் மரங்களுக்கு இயற்கை உரங்களாக கிடைக்கிறது என தெரிவித்தார்.