தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்ற 1500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், டிஆர்பி மூலம் நேரடி நியமனமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கூடுதலாக 500 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர் காலதாமதம்

பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும் நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் மூலம் கற்பித்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவதற்கான அரசாணை எண் 149, கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையே ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய கருத்தாளர் (GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS - BRTE) ஆகிய பணிகளுக்கு 2,222 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது.

இதற்காக நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கு நவம்பர் 1 முதல் 30ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பித்தனர். ஆன்லைன் மூலமாக மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பித்த நிலையில், ஜனவரி மாதம் 7ஆம் தேதி தேர்வு நடைபெறுவதாக இருந்தது. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டநிலையில், தேர்வு பிப்ரவரி மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்

இந்த நிலையில், தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்ற 1500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்‌ துறையில்‌ தொடக்கக்‌ கல்வி இயக்கக நிர்வாகத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ நேரடி நியமனம்‌ மூலம்‌ நிரப்ப வேண்டிய இடைநிலை ஆசிரியர்‌ விவரங்கள்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தகாலிப்‌பணியிடங்களுக்கு நேரடி நியமனம்‌ மூலம்‌ 2023- 24ஆம்‌ ஆண்டில்‌ பணிநாடுநர்களைத்‌ தெரிவு செய்யவும்‌, ஏற்கனவே நேரடி நியமனம்‌ மூலம்‌ நிரப்ப அனுமதி வழங்கப்பட்ட 1000 இடைநிலை ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ தவிர்த்து மீதமுள்ள இடைநிலை ஆசிரியர்‌ காலிப்‌ பணியிடங்களை ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ நிரப்ப அனுமதி வழங்குமாறும் தொடக்கக்கல்வி இயக்குநர்‌ அரசைக்‌ கோரியுள்ளார்‌.

இதன்படி,  ரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 2023-2024-ஆம்‌ ஆண்டின்‌ கண்டறியப்பட்ட 8643எண்ணிக்கையில்‌, பின்வரும்‌ நிபந்தனைகளின்‌ அடிப்படையில்‌, ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள 1000 இடைநிலை ஆசிரியர்‌ பணியிடங்களுடன்‌ கூடுதலாக 5௦00 இடைநிலை ஆசிரியர்‌ காலிப்பணியிடங்களை ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ நிரப்ப தொடக்கக்‌ கல்வி இயக்குநருக்கு அனுமதியளித்து அரசு ஆணையிடுகிறது.

ஒருங்கிணைந்த நிதி மற்றும்‌ மனித வள மேலாண்மை அமைப்பால்‌ (IFHRMS) அனுமதிக்கப்பட்ட அளவைவிட உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்‌ பணியிடங்களை, அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில்‌ 100க்கும்‌ மேற்பட்ட மாணவர்கள்‌ எண்ணிக்கையுடைய பள்ளிகளுக்கு பணிநிரவல்‌ செய்யப்பட வேண்டும்‌.

தற்போது இடைநிலை ஆசிரியர்‌ 1500 பணியிடங்களை நிரப்பிக்‌கொள்ள அனுமதிக்கப்பட்டதில்‌ தேர்வாகும்‌ தேர்வர்களை பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ அதிகமாக காலியாகவுள்ள மாவட்டங்களில்‌ முன்னுரிமை அடிப்படையில்‌ நியமனம்‌ செய்யப்பட வேண்டும்‌.

அவ்வாறு நியமனம்‌ செய்யப்படும்‌ முன்னுரிமை மாவட்டங்களில்‌ தேர்வர்களை முதலில்‌ நியமனம்‌ செய்யும்‌ போதே குறைந்தபட்சம்‌ 5 ஆண்டுகள்‌ இம்மாவட்டங்களில்‌ பணிபுரிய வேண்டும்‌ எனும்‌ நிபந்தனையை நியமன ஆணையில்‌ குறிப்பிட்டு நியமனம்‌ செய்யப்பட வேண்டும்‌ என்று பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.