மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப்பில் இந்தியாவின் நிது கங்காஸ் தங்கம் வென்றுள்ளார். 48 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற போட்டியில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். மங்கோலிய வீராங்கனையை 5 - 0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அசத்தியுள்ளார். உள்ள கேடி ஜாதவ் இன்டோர் ஹாலில் நடந்த  போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். 22 வயதான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இவர், மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். 


முதல் சுற்றில் நிது கங்காஸ் கொரியாவின் காங் டோயோனை தோற்கடித்து தனது வெற்றிக்கணக்கை தொடங்கினார்.  அதன்பிறகு,  அவர் இரண்டாவது சுற்றில் தஜிகிஸ்தானின் கோசிமோவா சுமையாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 


காலிறுதியில் ஜப்பானிய வீரரான மடோகா வாடாவுக்கு எதிரான போட்டியில் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமில்லாமல் அவரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.  அதன் பின்னர் நடந்த  அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் அலுவா பெல்கிபெகோவாவை 5-2 என்ற கணக்கில் தோற்கடித்ததே அவரது மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. நிது கங்காஸ் தான் வெற்றியாளர் என  அறிவிக்க நடுவர் போட்டியை நிறுத்த வேண்டியிருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் அந்த அளவுக்கு மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அரையிறுதி போட்டிக்குப் பின்னர்  இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கமாவது உறுதியானது என அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கையில், தங்கமே வென்று தருகிறேன் என்பதைப் போல், தங்கம் வென்றுள்ளார். 


 






 


இறுதிப் போட்டியில் மங்கோலியாவின் லுட்சைகான் அல்டான்செட்செக்கை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். அதுவும் சிறப்பாக விளையாடி  5-0 என்ற கணக்கில் வென்றார். நடப்பு தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும்.


இந்த வெற்றியின் மூலம், நிது கங்காஸ்  உலக சாம்பியனாக முடிசூட்டப்பட்ட ஆறாவது இந்திய குத்துச்சண்டை வீரர் ஆனார். ஆறு முறை சாம்பியனான மேரி கோம் (2002, 2005, 2006, 2008, 2010 மற்றும் 2018), சரிதா தேவி (2006), ஜென்னி ஆர்.எல் (2006), லேகா கே.சி (2006) மற்றும் நிகத் ஜரீன் (2022) ஆகியோர் வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.