IND Vs ENG Lords Test: லார்ட்ஸில் நடைபெற்று வரும் மூன்றவாது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில், இங்கிலாந்து அணி 251 ரன்களை எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணி நிதானம்:
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளுக்கு தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. இந்நிலையில் இங்கிலாந்தில் நேற்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இரண்டு போட்டிகளிலும் மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால், ரன்கள் அதிவேகமாக குவிக்கப்பட்டது. ஆனால், லார்ட்ஸ் மைதானம் பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்ததால், பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் சேர்க்க முடியாம் தடுமாறினர். 44 ரன்களை சேர்ப்பதற்குள் இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
ஜோ ரூட் அபாரம்:
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், இத்தகைய ஆடுகளங்களில் சிறப்பாக ஆடக்கூடிய ஜோ ரூட் வழக்கம்போல் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்படி அரைசதமும் கடந்தார். அவருக்கு உறுதுணையாக கேப்டன் ஸ்டோக்ஸும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார். அதன்படி, இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களை சேர்த்துள்ளது. ஜோ ரூட் 99 ரன்களிலும், ஸ்டோக்ஸ் 39 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
மந்த நிலைக்கு சென்ற இங்கிலாந்து
நிதானமாக ஆடி போட்டியை டிரா செய்யும் டெஸ்ட் போட்டிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன எனவும், ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக அதிரடியாக ஆடும் பேஸ்பால் கிரிக்கெட் முறையை நாங்கள் பின்பற்றி வருவதாகவும் இங்கிலாந்து அணி கடந்த சில வருடங்களாக கூறி வருகிறது. ஆனால், லார்ட்ஸ் போட்டியில் இங்கிலாந்து அணி மிகவும் மந்தமாகவே ரன் சேர்த்தது. 83 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், அணியின் சரசாரி ஸ்கோர் 3 ரன்களுக்கும் குறைவாகவே உள்ளது. ஒரு கட்டத்தில் தொடர்ந்து 25 பந்துகளில் இங்கிலாந்து அணி ஒரு ரன் கூட எடுக்காமல் இருந்தது.
இங்கிலாந்து அணியை கலாய்த்த கில்:
இங்கிலாந்து அணி மிகவும் மந்த நிலையில் ரன் சேர்க்க, இனிமேல் பொழுது போக்கான டெஸ்ட் கிரிக்கெட் இருக்காது. சலிப்பை ஏற்படுத்தக் கூடிய டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் வந்துவிட்டோம்” என இங்கிலாந்து அணியை இந்திய கேப்டன் கில் கிண்டலடித்து பேசினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிறது. அதேநேரம் மிகவும் நிதானமாக விளையாடி வந்த ரூட்டை நோக்கி, “ரூட், பேஸ்பால் கிரிக்கெட் எங்கே?” என வேகப்பந்து வீச்சாளர் சிராஜும் கிண்டலாக கேட்டு கிண்டலடித்தார். இதனிடையே, இந்த போட்டியில் நிதிஷ் குமார் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.