புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து  251 ரன்களுடன் ஆடி வருகிறது.

லார்ட்ஸின் ராஜா:

அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனும், முன்னாள் கேப்டனுமான ஜோ ரூட் 99 ரன்களுடன் களத்தில் உள்ளார். லார்ட்ஸ் மைதானத்தைப் பொறுத்தவரை அங்கு அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையையும் ஜோ ரூட் தன் வசமே வைத்துள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் அவர் இதுவரை  7 சதங்கள் விளாசியுள்ளார்.

 

இன்று நடக்கும் 2வது நாள் ஆட்டத்தில் மேலும் 1 ரன் எடுத்து சதம் விளாசினால் அது அவருடைய 8வது சதம் ஆகும். கிரிக்கெட்டின் மெக்கா என்றும், கிரிக்கெட்டின் தாயகம் என்றும் கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஜோ ரூட் 2 ஆயிரத்து 121 ரன்களை எடுத்துள்ளார், அதில் 1 இரட்டை சதம், 7 சதங்கள், 8 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 200 ரன்களை இதே மைதானத்தில் விளாசியுள்ளார். 

2 ஆயிரம் ரன்கள்:

லார்ட்ஸ் மைதானத்தில் 2 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டே வீரர்களில் ரூட்டும் ஒருவர். இந்த மைதானத்தில் இவருக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமை இங்கிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான கிரஹாம் கூச் வைத்துள்ளார். அவர் 21 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6 சதங்கள், 5 அரைசதங்களுடன் இந்த சாதனையை படைத்துள்ளார். ஆனால், கூச் முச்சதம் விளாசிய பெருமைக்குச் சொந்தக்காரர். அவர் அதிகபட்சமாக 333 ரன்கள் எடுத்துள்ளார். 

வெளிநாட்டு வீரர்கள் ஆதிக்கம் குறைவு:

இந்த மைதானத்தைப் பொறுத்தவரை வெளிநாட்டு வீரர்கள் ஆதிக்கம் என்பது குறைந்த அளவே உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணியினர் அனைத்து அணியினருடனும் இந்த மைதானத்தில் ஆடியுள்ளதால் அவர்களின் ஆதிக்கமே ஓங்கியுள்ளது. வெளிநாட்டு வீரராக இந்த மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமாகிய ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். 

அவர் இதுவரை இந்த மைதானத்தில் 6 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 சதங்கள், 3 அரைசதங்களுடன் 604 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியாவிற்காக அந்த மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை முன்னாள் வீரர் திலீப் வெங்க்சர்கார் வைத்துள்ளார். அவர் இதுவரை அங்கு 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதங்கள், 1 அரைசதத்துடன் 508 ரன்கள் விளாசியுள்ளார். 

ரூட் எனும் அசுரன்:

லார்ட்ஸ் மைதானத்தைப் பொறுத்தவரை ஜோ ரூட்டின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 34 வயதான ஜோ ரூட் இதுவரை டெஸ்ட் போட்டியில் 36 சதம் விளாசியுள்ளார். 13 ஆயிரத்து 214 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 262 ரன்கள் எடுத்துள்ளார்.