ஐ.பி.எல் 2024:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது.
அதன்படி மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் இந்த சீசனில் விளையாட உள்ள முக்கியமான அறிமுக வீரர்கள் தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
சமீர் ரிஸ்வி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த முறை ஐ.பி.எல் தொடர் மூலம் அறிமுகம் ஆகும் இளம் வீரர் சமீர் ரிஸ்வி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை ரூபாய் 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. சி.எஸ்.கே அணியில் இளம் வீராராக சமீர் ரிஸ்வி இருப்பார். சமீபத்தில் நடந்த UP T20 லீக்கில் அதிக சிக்ஸர் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். அதேபோல், 23 வயதிற்குட்பட்டோருக்கான சி.கே.நாயுடு டிராபியில் உத்தரப்பிரதேச அணிக்காக மூன்று சதங்களை விளாசினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை அம்பதி ராயுடு அணியில் இல்லாததாலும் அஜிங்க்யா ரஹானே பார்மிற்கு போராடி வருவதாலும் வலது கை சுரேஷ் ரெய்னா என்று அழைக்கப்படும் சமீர் ரிஸ்வி இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.
குமார் குஷாக்ரா (டெல்லி கேபிட்டல்ஸ்)
கடந்த 2022 ஆம் ஆண்டு சாலை விபத்திற்கு உள்ளானவர் ரிஷப் பண்ட். இதனால் அவர் முக்கியமான பல்வேறு சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. காயம் காரணமாக சிகிச்சை பெற்ற வந்த இவர் இந்த முறை அதாவது 17 வது ஐ.பி.எல் சீசனில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக களம் இறங்க உள்ளார். முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் குமார் குஷாக்ரா விற்கு கடும் போட்டி நிலவியது.
இவரை ஏலத்தில் எடுப்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் , டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இறுதியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ரூபாய் 7.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்த முறை டெல்லி அணியில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக இல்லாமல் பேட்டிங் மட்டுமே செய்யும் சூழல் ஏற்பட்டால் குமார் குஷாக்ரா விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் தியோதர் டிராபியில் சிறப்பாக விளையாடி சவுரங் கங்குலியின் பாராட்டைப் பெற்றார். பின்னர், 50-ஓவர் விஜய் ஹசாரே டிராபியிலும் சிறப்பாக விளையாடினார்.
ஷுபம் துபே (ராஜஸ்தான் ராயல்ஸ்)
ஷுபம் துபேவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூபாய் 5.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 2023ல், சையத் முஷ்டாக் அலி டிராபியில் விதர்பா அணிக்காக விளையாடிய துபே 221 ரன்களை குவித்தார். 190 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடியதால் அணியின் உரிமையாளர்களை எளிதில் கவர்ந்தார் ஷுபம் துபே.
அர்ஷின் குல்கர்னி (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்)
இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்றவர் அர்ஷின் குல்கர்னி. அந்த வகையில் ஏலத்தில் அவருக்கு அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட 20 லட்சம் ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. முன்னதாக மகாராஷ்டிரா பிரீமிய லீக்கில் ஈகிள் நாசிக் டைட்டன்ஸ் அணிக்காக ஒரு சதம் விளாசியிருந்தார். மேலும், குல்கர்னி 2023 இல் சையத் முஷ்டாக் அலி டிராபியில் மகாராஷ்டிராவுக்காக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் விளையாட இருக்கிறார்.
ஸ்வஸ்திக் சிகாரா (டெல்லி கேபிட்டல்ஸ்)
ஸ்வஸ்திக் சிகாராவை டெல்லி கேப்பிடல்ஸ் தனது அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு வாங்கியது. UP T20 லீக்கில், 173.33 ஸ்டிரைக் ரேட்டில் பத்து இன்னிங்ஸில் 3 சதங்கள், 494 ரன்களுடன் இரண்டாவது அதிக ஸ்கோர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
முன்னதாக ஸ்வஸ்திக் சிகாரா தனது விஜய் ஹசாரே டிராபியில் உத்தரப் பிரதேசத்திற்காக அறிமுகமானார், 101 பந்துகளில் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பென்சர் ஜான்சன் (குஜராத் டைட்டன்ஸ்)
இந்த சீசனில் மிகவும் விரும்பப்படும் வீராராக இருப்பவர் 28 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன். இவர் நூறு (ஓவல் இன்வின்சிபிள்ஸ்), MLC (லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்) மற்றும் சர்ரே ஜாகுவார்ஸ் (குளோபல் T20 கனடா) ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார். இச்சூழலில் தான் இந்த ஆண்டு குஜராத் அணி இவரை ரூபாய் 10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. முகமது ஷமிக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவருக்கு மாற்றாக ஸ்பென்சர் ஜான்சன் இருக்கலாம் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா விரும்பியதால் இவரை அந்த அணி ஏலத்தில் வெளிநாட்டு வீரரான இவரை எடுத்துள்ளது.
அஸ்மத்துல்லா ஓமர்சாய் (குஜராத் டைட்டன்ஸ்)
ஆப்கானிஸ்தான் அணியின் ஹர்திக் பாண்டியா என்று அழைக்கப்படுபவர் அஸ்மத்துல்லா ஓமர்சாய். 23 வயதான ஓமர்சாய் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பில் குஜராத் டைட்டன்ஸ் அணி இவரை ரூபாய் 50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.
முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த நேரத்தில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பாராட்டை பெற்றார்.
முன்னதாக பல்லேகலேயில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 149 ரன்கள் எடுத்தார் . இவர் பிபிஎல் மற்றும் பிஎஸ்எல் (பெஷாவர் சல்மி) ஆகியவற்றில் பாபர் ஆசாமுடன் இணைந்து விளையாடி உள்ளார். இச்சூழலில் தான் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்து விளையாட இருக்கிறார்.
நுவான் துஷாரா (மும்பை இந்தியன்ஸ்)
லசித் மலிங்கா தனது ஸ்லிங் ஆக்ஷன் மூலம் பேட்டர்களை மிரட்டுவது அனைவரும் அறிந்த விஷயம் தான். இப்போது அவரின் பந்து வீச்சை போல் வீசும் வீரராக நுவான் துஷாரா அறியப்படுகிறார். 29 வயதான நுவான் துஷாரா இதற்கு முன் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதில்லை என்றாலும் எல்பிஎல் மற்றும் பிஎஸ்எல் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
துஷாரா இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் எடுத்தார். தொடர்ந்து ஐந்து விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை செய்தார். இச்சூழலில் தான் நுவன் துஷாரா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.
ஜெரால்ட் கோட்ஸி (மும்பை இந்தியன்ஸ்)
கடந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மாற்று வீரராக இருந்தவர் ஜெரால்ட் கோட்ஸி. கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடினார். அந்த வகையில், 8 போட்டிகள் விளையாடிய இவர் 19.05 ஸ்ட்ரைக் ரேட்டில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இச்சூழலில் தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசனில் களம் காண இருக்கிறார் ஜெரால்ட் கோட்ஸி.
ரச்சின் ரவீந்திரா(சென்னை சூப்பர் கிங்ஸ்)
நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா. இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பையின் மூலம் பிரபலமானவர். 10 போட்டிகளில் 64.22 சராசரியிலும், 106.44 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 578 ரன்களை எடுத்ததன் மூலம் நான்காவது அதிக ரன் அடித்தவர் ஆனார். 24 வயதான இவரை 1.8 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே ஒப்பந்தம் செய்துள்ளது.
சமீபத்தில் நியூசிலாந்து டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்த அவர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 240 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இவர் அரைசதம் அடித்தார்.
ரச்சின் ரவீந்திரா மொத்தம் 56 டி20 போட்டிகளில் விளையாடி 16.41 சராசரியில் 673 ரன்கள் எடுத்துள்ளார். அவர் தனது இடது கை சுழற்பந்து வீச்சில் 41 சராசரியில் 41 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஐபிஎல் 2024ல் எம்எஸ் தோனியின் தலைமையின் கீழ் முதன்முறையாக விளையாட உள்ள இவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கலக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!