ஐ.பி.எல் தொடர்:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களிலேயே ஒரு சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ரன் மிஷின் விராட் கோலி:
இந்திய அணியின் ரன் மிஷின் என்று இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலகத்தின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் விராட் கோலி. சர்வதேச அளவில் கடந்த 2008 ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானவர். அதேபோல் சர்வதேச அளவில் 2010 ஆம் ஆண்டு டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும், டெஸ்ட் போட்டியில் 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் அறிமுகமானார். அதன்படி சர்வதேச அளவில் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர், இந்திய அணிக்காக அதிக வெற்றிகளில் பங்கேற்ற வீரர்,ஒருநாள் போட்டிகளில் குறைவான இன்னிங்ஸ்களில் விளையாடி 13,000 ஒருநாள் ரன்களை எட்டிய முதல் சர்வதேச வீரர், ஒரு உலகக்கோப்பையில் 700 ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனைகளுக்கு எல்லாம் சொந்தக்காரர் விராட் கோலி தான்.
ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்:
அதோடு, இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் டி 20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த முதல் வீரர் மற்றும் 7 ஆயிரம் ரன்களை முதலில் கடந்த வீரராகவும் விராட் கோலி தான் இருக்கிறார். அந்தவகையில் ஐ.பி.எல் தொடரில் ஒரு சீரிஸில் அதிக ரன்களை குவித்த வீரராகவும் விராட் கோலி தான் இருக்கிறார். அதன்படி, கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 16 போட்டிகள் விளையாடிய விராட் கோலி 973 ரன்களை குவித்தார். அந்த சீசனில் மட்டும் 4 சதங்கள் மற்றும் 7 அரைசதங்களை விளாசினார். இதில் 83 பவுண்டரிகள் மற்றும் 38 சிக்ஸர்கள் அடங்கும். இதுவரையில் 237 ஐ.பி.எல் போட்டிகள் விளையாடியுள்ள கோலி 7263 ரன்களை குவித்துள்ளார். இதில் 7 சதங்கள் மற்றும் 50 அரைசதங்கள் அடங்கும். அந்தவகையில் தான் விளையாடிய ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரையில் 643 பவுண்டரிகள் மற்றும் 234 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ள விராட் கோலி அதிகபட்சமாக 113 ரன்களை விளாசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Dhruv Jurel: கார்கில் போர் வீரரான தந்தைக்கு பிக் சல்யூட் - துருவ் ஜூரல் பின்னணி தெரியுமா?
மேலும் படிக்க: https://tamil.abplive.com/sports/cricket/dhruv-jurel-big-salute-to-his-father-nem-singh-jural-former-kargil-war-veteran-169500/amp