Video Kohli RCB:  மகளிர் பிரீமியர் லீக் தொடரில் கோப்பையை வென்ற பெங்களூர் அணிக்கு, ஆடவர் அணியை சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


கோப்பையை வென்ற மகளிர் ஆர்சிபி அணி:


ஆடவருக்கான ஐபிஎல் தொடரை போன்று, மகளிருக்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை கடந்த ஆண்டு முதல் பிசிசிஐ நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு தொடருக்கான இறுதிப்போட்டியில், மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணியும் மற்றும் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்ட்இங் செய்த டெல்லி அணி 113 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி, 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது. ஆர்சிபி என்ற பெயரில் ஒரு அணி வென்ற முதல் கோப்பை இதுவாகும். ஆடவர் பெங்களூர் அணி 16 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும், இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இதையடுத்து மகளிர் ஆர்சிபி அணிக்கு கோலி உள்ளிட்ட இந்நாள் மற்றும் முன்னாள் ஆர்சிபி ஆடவர் அணியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


கோலி வீடியோ காலில் வாழ்த்து:


மைதானத்தில் வெற்றிக் களிப்பில் இருந்த ஆர்சிபி மகளிர் அணி வீராங்கனைகளை, விராட் கோலி வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இதனால், வீராங்கனைகள் மேலும் உற்சாகமடைந்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு, தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ”கோப்பையுடன் கூடிய ஆர்சிபி மகளிர் அணியின் புகைப்படத்தை பதவிட்டு, சூப்பர் வுமன்ஸ்” என பாராட்டியுள்ளார்.







குவியும் வாழ்த்துகள்:


ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான கெயில் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அற்புதமான செயல்பாட்டிற்கு வாழ்த்துகள், ஒருவழியாக ஈ சாலா கப் நம்தே”என குறிப்பிட்டுள்ளார். தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்களும், ஆர்சிபி மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  இதேபோன்று பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். மேலும், நடப்பாண்டில் டூப்ளெசிஸ் தலைமையிலான ஆடவர் ஆர்சிபி அணியும் கோப்பையை வெல்லும் என, பெங்களூர் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.