இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் களம் திரும்புவார் என அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்தநிலையில், வருகின்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2023) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பும்ரா உடற்தகுதியுடன் களமிறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் முழு தொடரிலிருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


பும்ரா உடற்தகுதி:


ஜஸ்பிரித் பும்ரா தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி பெறுவதற்காக, அங்கு சில காலம் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இப்படிப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி 2 போட்டிகளில் இடம்பெறுவார் என்று திர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது உடல்தகுதியின் அடிப்படையில் ரிஸ்க் எடுக்காமல் தேர்வாளர்கள் அவரை அணியில் சேர்க்கவில்லை.


கடந்த ஆண்டு, டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் பும்ரா விளையாடினார். ஆனால் அதன் பிறகு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் வெளியேறி சிகிச்சை பெற்றார். இப்போது அவர் இந்திய அணியிலிருந்து விலகி சுமார் 8 மாதங்கள் கடந்துவிட்டது. இதையடுத்து, பும்ரா உடற்தகுதி குறித்து வெளியாகும் அறிக்கைகளின்படி, பும்ரா ஐபிஎல் 2023 சீசனில் இருந்து மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இன்னும் முழு உடற்தகுதி பெறாததால் முழு சீசனிலும் இருந்து விலகலாம் என தெரிகிறது. 


மும்பை இந்தியன்ஸ் - பும்ரா:


இந்திய அணிக்கு பும்ராவின் தேவை எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் பும்ராவின் வருகைக்காக காத்திருக்கிறது. 


கடந்த 2022 ஜூலை மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது பும்ராவிற்கு காயம் ஏற்பட்டது. அதன்பிறகு கடந்த 7 மாதங்களில் இரண்டு டி20 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடியுள்ளார். கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது வரை இந்திய அணிக்கு திரும்பவில்லை. 


மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பும்ரா திரும்பவில்லை என்றால் அவருக்கு பதிலாக வேறு வீரரை அணி நிர்வாகம் திட்டமிடும். இருப்பினும், கடந்த சீசனில் மும்பை அணியில் இடம்பெற்றிருந்த ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக விலகினார். வரவிருக்கும் சீசனில் அணிக்காக பும்ரா இல்லாததால் வேகப்பந்து வீச்சு தாக்குதலை ஆர்ச்சர் கொடுக்கலாம். 


மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் விவரம்:


ரோஹித் சர்மா (கேப்டன்)
டிம் டேவிட்
ரமன்தீப் சிங்
திலக் வர்மா
சூர்யகுமார் யாதவ்
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்)
டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
டெவால்ட் ப்ரீவிஸ்
ஜோஃப்ரா ஆர்ச்சர்
ஜஸ்பிரித் பும்ரா (சந்தேகம்)
அர்ஜுன் டெண்டுல்கர்
அர்ஷத் கான்
குமார் கார்த்திகேயா
ஹிருத்திக் ஷோக்கீன்
ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்
ஆகாஷ் மத்வால்


இந்தியன் பிரீமியர் லீக்கில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ், கடந்த ஐபிஎல் 2022 சீசனில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் அணியாக இருந்தது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் கோப்பை வென்றது. இந்தாண்டு ஏலத்திற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணி, கீரன் பொல்லார்ட், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பாசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் புத்தி, ரிலே மெரிடித், சஞ்சய் யாதவ் மற்றும் டைமல் மில்ஸ் ஆகியோரை விடுவித்தது.