WTC 2027 India Schedule: டி20 போட்டிகள் மற்றும் 50 ஓவர்களுக்கு உலகக்கோப்பைத் தொடர் நடைபெறுவது போல டெஸ்ட் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகள் இந்த தொடர் நடக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா சாம்பியன் மகுடத்தை கைப்பற்றியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:

இந்த நிலையில், 2025-2027ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.  ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் பங்கு பெறவில்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தகுதி பெற்ற அணிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்திய அணி எந்தெந்த அணியுடன்? எத்தனை போட்டிகள்? விளையாடுகிறது என்பதை கீழே காணலாம்.

இந்தியாவின் அட்டவணை:

1. இங்கிலாந்திற்கு எதிராக 5 டெஸ்ட் ( வெளிநாட்டில்) - ஜுன் 2025

2. வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக 2 டெஸ்ட் ( உள்நாட்டில் ) - அக்டோபர் 2026

3. தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 2 டெஸ்ட் ( உள்நாட்டில்) - நவம்பர் 2026

4. இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் (வெளிநாட்டில்) ஆகஸ்ட் 2026

5. நியூசிலாந்திற்கு எதிராக 2 டெஸ்ட் ( வெளிநாட்டில்) - அக்டோபர் 2026

6. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 டெஸ்ட் ( உள்நாட்டில்) - ஜனவரி 2027

18 டெஸ்ட் போட்டிகள்: இந்திய அணி மொத்தம் 18 டெஸ்ட் போட்டிகள் வரும் உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக ஆட உள்ளது. நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒவ்வொரு அணியும் 3 உள்நாட்டு தொடரிலும், 3 வெளிநாட்டு தொடரிலும் ஆடுகின்றனர்.  இரண்டு ஆண்டுகள் நடக்கும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியின் வெற்றி, தோல்வி, டிரா ஆகியவற்றை கருத்தில் கொண்டு வெற்றி சதவீதம் கணக்கில் கொள்ளப்படும். 

அந்த வெற்றி சதவீதத்தின்படி, அதிக புள்ளிகள் பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு அதிக டெஸ்ட் போட்டி ஆடும் அணியாக இங்கிலாந்து உள்ளது. அவர்கள் 21 போட்டிகள் ஆடுகின்றனர். அவர்களுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா 20 போட்டிகள் ஆடுகிறார்கள். மூன்றாவதாக இந்தியா 18 போட்டிகளில் ஆடுகிறது. 

இந்திய அணிக்கு காத்திருக்கு சவால்:

இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இந்தியாவிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதற்கு காரணம் இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் ஆகிய ஜாம்பவான்கள் ஓய்வு பெற்றதால் அவர்கள் இடம் காலியாக உள்ளது. புஜாரா, ரஹானே ஆகியோருக்கும் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களும் வயது காரணமாக புதியவர்களுக்கு வழிவிடும் கட்டாயத்தில் உள்ளனர். 

இந்த சூழலில், சுப்மன்கில் தலைமையில் இனி வரும் தொடர்களை எதிர்கொள்ள உள்ள இந்திய அணி என்ன செய்யப்போகிறது? என்பதே மிகப்பெரிய சவால் ஆகும்.