கிரிக்கெட் வரலாற்றில் மேக்ஸெவல்லிற்கு என்று எப்போதும் தனி இடம் உண்டு. ஏனென்றால், இவர் மைதானத்தில் ஒரு 20 பந்துகள் 30 பந்துகள் நின்றுவிட்டால் மொத்த ஆட்டத்தையும் மாற்றிவிடுவார். அதுபோன்று பல போட்டிகளில் தனது திறமையை காட்டியுள்ளார்.
மேக்ஸ்வெல் இஸ் பேக்:
மேக்ஸ்வெல் சமீபகாலமாக எந்த போட்டியிலும் சிறப்பாக ஆடாத நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்தும் பாதியில் வெளியேறினார். இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் நடக்கும் மேஜர் கிரிக்கெட் லீக்கில் ஆடி வருகிறார். அந்த போட்டியில் வாஷிங்டன் ப்ரீடம் அணிக்கு கேப்டனாகவும் உள்ளார்.
இந்த தொடரில் நேற்று வாஷிங்டன் ப்ரீடம் - லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வாஷிங்டன் ப்ரீடம் அணிக்காக ஓவன் 32 ரன்கள் எடுத்து அதிரடி தொடக்கம் தர, அடுத்து வந்த ரவீந்திரா, கெளஸ், சாப்மன், எட்வர்ட்ஸ் அடுத்தடுத்து அவுட்டாக 11.4 ஓவர்களில் 92 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வாஷிங்டன் ப்ரீடம்.
அப்போது, கேப்டன் மேக்ஸ்வெல் களத்தில் ஓபஸ் பியானாருடன் இணைந்தார். முதல் 15 பந்துகள் மிகவும் நிதானமாக ஆடினார். முதல் 15 பந்துகளில் வெறும் 11 ரன்கள் மட்டுமே இருந்தார்.
சிக்ஸர் மழை:
அதன்பின்பு, மேக்ஸ்வெல் பேட்டில் இருந்து சிக்ஸர் மழை பொழிந்தது. கார்னே, ஸ்கால்வாக், சுனில் நரைன், தன்வீர் சங்கா, ரஸல் ஆகியோருடன் கேப்டன் ஜேசன் ஹோல்டரும் பந்துவீசினார். ஆனால், யார் வீசினாலும் மேக்ஸ்வெல் சிக்ஸர் மழையை பொழிந்தார்.
அரைசதம் கடந்தும் அவரது ரன்வேட்டை நிற்கவில்லை. கடைசி ஓவரில் சதம் விளாசினார். மேலும், கடைசி ஓவரின் கடைசி பந்திலும் சிக்ஸர் விளாசி அசத்தினார். மேக்ஸ்வெல் கடைசியாக 49 பந்துகளில் 106 ரன்கள் விளாசினார். அதில் 2 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும். 13 சிக்ஸர்கள் விளாசினார். அவர் 46 ரன்கள் இருந்தபோது கிடைத்த கேட்ச் ஒன்றை எதிரணி தவறவிட்டது. அதற்கு தண்டனையாக 20 ஓவர்களில் 208 ரன்களை விட்டுக்கொடுத்தது லாஸ் ஏஞ்சல்ஸ்.
அபார வெற்றி:
மேக்ஸ்வெல் தனது ஆஸ்தான பேட்டிங் ஸ்டைலுடன் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அவர் ஆடிய விதம் ஒரு முறை உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தனி ஆளாக இரட்டை சதம் விளாசியதை நினைவூட்டியது.
பின்னர், 209 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆடிய லாஸ் ஏஞ்சல்ஸ் அணி 95 ரன்களுக்கு சுருண்டது. இதனால், வாஷிங்டன் ப்ரீடம் அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டியில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது ஓய்வை அறிவித்த மேக்ஸ்வெல்லின் அதிரடியை கண்ட ரசிகர்கள் ஓய்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
36 வயதான மேக்ஸ்வெல் உலகின் அபாயகரமான அதிரடி பேட்ஸ்மேன்களில் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.