ஐபிஎல் வரலாற்றில் வேறு எந்த அணியாலும் முடியாத 5 சாதனைகளை, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படைத்துள்ளது. 


இறுதிப்போட்டியில் சென்னை:


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முடிவடைய இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது. அகமதாபாத்தில் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணிக்கு மட்டுமே சொந்தமான 5 பெரும் சாதனைகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.


01. அதிகமுறை பிளே-ஆஃப் சென்ற அணி:


ஐபிஎல் தொடர் தொடங்கியது முதலே தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 2 வருடங்கள் விளையாடாவிட்டாலும், 14 சீசன்களில் சென்னை அணி விளையாடியுள்ளது. அதில், 12 முறை சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2020 மற்றும் 2022ம் ஆண்டுகளில் மட்டுமே சென்னை அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. வேறு எந்த அணியும் இந்த சாதனையை நிகழ்த்தியதில்லை. அடுத்தபடியாக மும்பை அணி தான் 10 முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.


02. அதிக போட்டிகளில் கேப்டன்:


ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட வீரர் என்ற பெருமை சென்னை அணி கேப்டன் தோனியை சேரும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 2008ம் ஆண்டு முதல் இதுவரை 219 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதோடு, கடந்த 2016ம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காகவும் 14 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். ஆனால், அதில் 5 போட்டிகளில் மட்டுமே புனே அணி வெற்றி பெற்றது.


03. குறைந்த ஸ்கோர் அடித்து வெற்றி:


2009ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில், வெறும் 116 ரன்கள் மட்டுமே எடுத்து அதை சென்னை அணி வெற்றிகரமாக டிபென்ஸ் செய்தது. அந்த போட்டியில் பஞ்சாப் அணியை வெறும் 92 ரன்களில் சுருட்டி, 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது தற்போது வரையில் ஐபிஎல் தொடரில் சாதனையாக தொடர்கிறது.


04.  அதிகமுறை இறுதிப்போட்டியில் விளையாடி அணி:


ஐபிஎல் தொடரில் அதிகமுறை இறுதிப்போட்டிக்கு சென்ற அணி என்ற பெருமையும் சென்னை அணியை தான் சேரும். அதன்படி, இதுவரை விளையாடிய 14 சீசன்களில் விளையாடி 10 முறை ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு சென்னை அணி தகுதி பெற்றுள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய பிறகு 2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில் மட்டுமே சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதுவரை நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், 9 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறினாலும் அதில் 5 முறை தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.


05. ஒரு தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரர்:


ஒரு தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர் என்ற பெருமையும், சென்னை அணியின் முன்னாள் வீரரான த்வெயின் பிராவோவை தான் சேரும். அதன்படி, கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது 18 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சாதனையை கடந்த 2021ம் ஆண்டு, பெங்களூரு வீரர் ஹர்ஷல் படேல் சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.