ஐபிஎல் 2023 இன் வெற்றியாளரை அறிய இன்னும் ஒரே ஒரு போட்டிதான் மிச்சம் உள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறும் இந்த போட்டியில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு குஜராத் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.


இறுதிப்போட்டியில் சென்னை அணி 


இந்த சீசனை தோல்வியுடன் தொடங்கிய சென்னை அணி, முதல் போட்டியில் குஜராத் அணியுடன் இதே அகமதாபாத் மைதானத்தில் தோல்வியை சந்தித்தது. ஆனால் அதன் பின் வெகுண்டெழுந்து முன்னேறிய அணியை, கேப்டன் தோனி சிறப்பாக வழிநடத்தி முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார். புள்ளிப்பட்டியளில் இரண்டாம் இடம்தான் என்றாலும், முதலிடம் பிடித்த குஜராத் அணியை முதல் குவாலிபையரில் வென்று இறுதிப்போட்டி ஸ்பாட்டில் ஜம்மென்று அமர்ந்தது தோனி தலைமையிலான அணி. தற்போது மீண்டும் குஜராத் அணியை எதிர்த்து இறுதிப்போட்டியில் ஆட காத்திருக்கிறது.



குஜராத் அணி


கடந்த சீசன் போலவே இந்த சீசன் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது குஜராத் அணி. அதற்கு முக்கிய காரணம் அந்த அணியில் இருக்கும் வீரர்கள் அனைவருமே ஃபார்மில் இருப்பது போன்ற தன்னம்பிக்கையுடன் இருப்பதுதான். அதுவே அவர்களுக்கு தனி நபர்களாகவும் ஒரு அணியாகவும் வெற்றியை தருகிறது. அவரவர்களுக்கு ஏற்ற கதாப்பாத்திரத்தை கொடுத்து அதனை கச்சிதமாக செய்யவைத்து வருகிறார்கள் ஹாதிக் - நெஹ்ரா காம்போ. இருப்பினும் குவாலிபையர் ஒன்றில் சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்த அந்த அணி, குவாலிபையர் இரண்டில் மும்பை அணியை வென்று இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்: Shubman Gill Century: கிழி கிழி என கிழித்து மும்பைக்கு கிலி காட்டிய கில்... நடப்பு சீசனில் 3வது சதம்!


பரபரப்பான இறுதிப்போட்டி


இம்முறை வென்றால் சென்னை அணிக்கு இது 5வது கோப்பையாக மாறும். இதன் மூலம் அதிக கோப்பைகள் வென்ற மும்பை அணியை சமன் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். கடந்த முறை சாம்பியன் ஆன குஜராத் அணி மீண்டும் வென்றால் அந்த அணிக்கு அது இரண்டாவது கோப்பையாக அமையும். அதோடு அந்த அணி உள்ளே வந்ததில் இருந்து, வேறு எந்த அணிக்கும் கோப்பை செல்லாமல் இருக்கும் இரண்டாவது ஆண்டாக இது தொடரும். இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.



நேரடி ஒளிபரப்பு


இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு துவங்கும் இந்த போட்டி ஜியோ சினிமா ஆப்பில் இலவசமாக, 4கே தொழில்நுட்பத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும், அதே நேரத்தில் டிவி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் இருக்கும். இரண்டிலுமே பல மொழிகளில் வர்ணனை கிடைக்கும். மே 28 அன்று, ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும் போது, அகமதாபாத்தில் வானிலை எந்த வித இடையூறும் செய்யாது என்று தெரிகிறது. வெப்பநிலை 35 முதல் 40 டிகிரி வரை இருக்கும் என்றும், அன்றைய தினம் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் வானிலை அறிக்கை கூறுகிறது. அதனால் முழு போட்டியும் விளையாடப்படும் என்பதில் ரசிகர்கள் சந்தேகம் கொள்ள வேண்டியது இல்லை.


இந்த ஐபிஎல் குறித்த அனைத்து விஷயங்களையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!