Dhoni on Defeat: இதுனாலதான் நாங்க தோத்துட்டோம்.!! படுதோல்விக்குப்பின் கேப்டன் தோனி கூறியது என்ன.?
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், கொல்கத்தா அணியிடம் படுதோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என தோனி என்ன கூறியிருக்கிறார் தெரியுமா.?

ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில், கொல்கத்தா அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வியை சந்தித்தது. அதிலும், ஐபிஎல் வரலாற்றிலேயே சேப்பாக்கத்தில் தனது குறைந்தபட்ச ரன்களை நேற்று பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த நிலையில், இந்த தோல்விக்கு காரணமாக தோனி என்ன கூறினார் என்று பார்க்கலாம்.
5-வது தொடர் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், நேற்று கொல்கத்தா அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டதால், பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் மைதானத்தில் குவிந்திருந்தனர். இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
Just In




இதையடுத்து பேட்டிங் செய்ய வந்த சென்னை அணி, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சையை கொடுத்தது. 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 103 ரன்களை மட்டுமே எடுத்தது சிஎஸ்கே. கொல்கத்தா தரப்பில், சுனில் நரேன் 3 விக்கெட்டுகளும், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஐபிஎல்லின் 18 சீசன்களில், சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி எடுத்த குறைந்தபட்ச ரன்கள் இதுதான்.
இதைத் தொடர்ந்து, எளிய இலக்குடன் ஆட வந்த கொல்கத்தா அணி, 10.1 ஓவர்களில், 2 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து 107 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது. அதிகபட்சமாக சுனில் நரேன் 44 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் கொல்கத்தா அணி தனது 3-வது வெற்றியை பதிவு செய்த நிலையில், சென்னை அணி தனது 5-வது தொடர் தோல்வியை சந்தித்தது. இதனால், சென்னை ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.
எங்களுக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை - தோனி
இந்த படுதோல்விக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த சென்னை அணியின் கேப்டன் தோனி, சில இரவுகளாகவே தங்களுக்கு எதுவுமே சாதகமாக நடக்கவில்லை என தெரிவித்தார். மேலும் தங்களுக்கு சவால்கள் இருந்ததாகவும், அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றும் தோனி கூறினார்.
தாங்கள் போதிய அளவிற்கு ரன்களை எடுக்கவில்லை என தெரிவித்த அவர், 2-வது இன்னிங்சில் தாங்கள் பவுலிங் செய்தபோது பந்து சற்று நின்று வந்ததாகவும், நேற்று முதல் இன்னிங்சிலும் அப்படியே நடந்தது என்றும் தங்களுக்கு பார்ட்னர்ஷிப் அமையவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், பவர் ப்ளேவில் அதிக அளவில் விக்கெட்டுகளை இழந்துவிட்டால், நடு வரிசையில் ஆடும் வீரர்களுக்கு அது கடினமாக மாறிவிடும் என்றும், இதனால் பின் வரிசை வீரர்கள் பெரிய ஷாட்டுகளை ஆட முடியாது என்றும் தெரிவித்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி.
அவர் என்ன காரணம் கூறினாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திலும், விரக்தியிலும் உள்ளனர் என்பதுதான் உண்மை.