இந்திய மகளிர் கால்பந்து அணி பிரேசில் நாட்டில் நான்கு நாடுகளுக்கு இடையே நடைபெறும் சர்வதேச கால்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளது. இந்தப் போட்டிகளில் இந்தியா, பிரேசில், சிலி,வெனிசுலா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. இதற்கான இந்திய அணி நேற்று பிரேசில் கிளம்பியது. இந்த அணிக்கு தாமஸ் டென்னர்பி பயிற்சியாளராக உள்ளார். மேலும் 23 பேர் கொண்ட மகளிர் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்துமதி கதிரேசன், கார்த்திகா அங்கமுத்து, மாரியம்மாள் பாலமுருகன், சவுமியா நாராயணசாமி ஆகிய நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் தவிர அஷாலதா தேவி, அதிதி சௌஹான்,லிங்தொங் தேவி, ரேனு உள்ளிட்ட வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். இந்திய மகளிர் கால்பந்து அணி ஃபிபா உலக தரவரிசையில் 57ஆவது இடத்தில் உள்ளது. பிரேசில் அணி ஃபிபா தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ளது. அதேபோல், சிலி அணி உலக தரவரிசையில் 37ஆவது இடத்திலும், வெனிசுலா அணி 56ஆவது இடத்தில் உள்ளன. ஆகவே இந்தத் தொடரில் பங்கேற்றுள்ள மூன்று அணிகளும் இந்திய அணியைவிட தரவரிசையில் முன்னிலையில் உள்ளன. இதன் காரணமாக இந்தத் தொடர் இந்திய அணி மிகவும் சவால் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அதேசமயம் இந்திய வீராங்கனைகளுக்கு இது ஒரு நல்ல பயிற்சியாகவும் அமையும் என்று கருதப்படுகிறது.
இந்திய அணி தனது முதல் போட்டியில் பலம் வாய்ந்த பிரேசில் அணியை வரும் 25ஆம் தேதி மோதுகிறது. அதைத் தொடர்ந்து 28ஆம் தேதி சிலி அணியை எதிர்த்து விளையாடுகிறது. கடைசி போட்டியில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெனிசுலா அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்தத் தொடர் குறித்து இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் டென்னர்பி கூறுகையில்,”இந்தத் தொடர் இந்திய அணிக்கு மிகவும் சவாலான ஒன்று. பிரேசில் அணியில் உலக தரம் வாய்ந்த வீராங்கனைகள் உள்ளனர். அவர்களுக்கு எதிராக நம்முடைய வீராங்கனைகள் விளையாடும் போது அது ஒரு நல்ல பாடமாக அமையும். இந்திய வீராங்கனைகள் அந்த கடினமான போட்டிகளை எந்தவித பயமும் இல்லாமல் எதிர்கொள்வார்கள்” எனத் தெரிவித்தார்.
இந்துமதி கதிரேசன் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார். சேலத்தைச் சேர்ந்த கோல் கீப்பர் சவுமியா நாராயணசாமி. அதேபோல் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள் பாலமுருகன். கொரோனா பெருஞ்தொற்று பொதுமுடக்கத்தின் போது இந்துமதி கதிரேசன் காவலராக பணியாற்றி செய்த செயல் மிகவும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பீல்டிங் செய்தபோது தலையில் தாக்கிய பந்து.. ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்ட மேற்கிந்திய வீரர்! - அறிமுக போட்டியில் பரிதாபம்