இங்கிலாந்து அணிக்கு எதிராக 100 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்கிற சாதனையை படைத்தார் இந்திய வீரர் ரிஷப் பண்ட்
ஹெடிங்லி டெஸ்ட்:
ஹெடிங்லியில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் , இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 471 ரன்களை எடுத்தது, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் 465 ரன்களை எடுத்தது. பின்னர் நேற்று 3வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 90/2 ரன்கள் எடுத்து, 96 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது, இன்றைய நாளின் முதல் ஓவரிலேயே கேப்டன் சுப்மன் கில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பண்ட் அதிரடி:
இதன் பின்னர் கே.எல் ராகுலுடன் இந்திய துணைக்கேப்டன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார், இருவரும் உணவு இடைவேளை வரை நிதானமாக ஆடிய நிலையில் 2வது செஷனில் அதிரடி காட்ட தொடங்கினர், குறிப்பாக ரிஷப் பண்ட் முதல் இன்னிங்ஸ்சில் காட்டிய அதே அதிரடியை இரண்டாவது இன்னிங்ஸ்சில் தொடர்ந்தார். பண்ட்டின் அதிரடியால் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் செய்வதறியாது இருந்தனர்.
சதமும் நொறுக்கப்பட்ட சாதனைகள்:
பண்ட் அடித்த அடியில் இந்திய அணியின் ரன் வேகம் மளமளவென உயர்ந்தது, மறுப்பக்கம் கே.எல் ராகுல் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். அதிரடியாக ஆடிய பண்ட் டெஸ்ட் அரங்கில் தனது 8வது சதத்தை பதிவு செய்தார், மேலும் இங்கிலாந்து அணி எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரே டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்கிற சாதனையும் ரிஷப் பண்ட் படைத்தார்.
இதுமட்டுமில்லாமல் டெஸ்டில் தொடர்ந்து இரண்டு சதங்களை அடித்த 7வது இந்திய வீரர் என்கிற சிறப்பையும் பெற்றார்.
- விஜய் ஹசாரே
- சுனில் கவாஸ்கர் (3)
- ராகுல் டிராவிட் (2)
- விராட் கோலி
- அஜிங்க்யா ரஹானே
- ரோகித் சர்மா
- ரிஷப் பண்ட்
முதல் இந்திய விக்கெட் கீப்பர்:
அதே போல சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து இரண்டு சதங்கள் அடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் என்கிற சாதனையை பண்ட் படைத்தார். இதற்கு முன்னர் 2001 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரான ஆண்டி பிளவர் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸ்சிலும் சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக சிக்சர்கள்:
இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்தவர் என்கிற சாதனையை ரிஷப்பண்ட் சமன் செய்தார், இதற்கு முன்னர் இங்கிலாந்து வீரர் ஃபிளிண்டாப்(2005), பென் ஸ்டோக்ஸ்(2023) 9 சிக்சர்கள் அடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.