உலககோப்பை தொடரில் இலங்கை அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியும் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது. இதையடுத்து, மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று இலங்கையின் காலே மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கைத் தேர்வு செய்தது. கேப்டன் கருணரத்னேவும், பதும் நிசங்காவும் ஆட்டத்தை தொடங்கி நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். மேற்கிந்திய தீவுகள் அணி கிரெய்க் பிரெய்த்வட் களமிறங்கியது. மேற்கிந்திய தீவுகள் அணியில் அறிமுக வீரராக ஜெர்மி சோலோஜனோ களமிறங்கினர்.
இலங்கை வீரர்கள் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த போது, ஆட்டத்தின் 24வது ஓவரை மேற்கிந்திய தீவுகள் அணியின் ராஸ்டன் சாஸ் பந்துவீசினார். அப்போது, இலங்கை கேப்டன் கருணரத்னே பேட்டிங் செய்து கொண்டிருந்தார். சுழற்பந்துவீச்சு என்பதால் கருணரத்னேவிற்கு மிக அருகிலே ஜெர்மி சோலோஜனோ நிறுத்தப்பட்டிருந்தார். ராஸ்டன் சேஸ் வீசிய பந்தை பவுண்டரி அடிக்கும் நோக்கத்தில் கருணரத்னே விளாசினார்.
ஆனால், அவருக்கு மிக அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஜெர்மி சோலோஜனோ நெத்தியில் பந்து மிகவும் கடுமையாக தாக்கியது. அவர் ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும் அவரது நெத்தியில் பந்து மிகவும் கடுமையாக தாக்கியது. இதனால். சோலோஜனோ மைதானத்திலே சுருண்டு விழுந்தார். அவரது நெத்தியில் இருந்து ரத்தம் வழிந்தோடியது.
சில நிமிடங்கள் அவர் மைதானத்திலே சுருண்டு விழுந்து கிடந்ததால் வீரர்கள், நடுவர்கள் என அனைவர் மத்தியிலும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர், உடனடியாக மைதானத்திற்குள் ஸ்ட்ரச்சர் கொண்டுவரப்பட்டது. சோலோஜனோ சுயநினைவுடனே இருந்தார். உடனடியாக அவரை ஸ்டரச்சரில் சுமந்து சென்ற மைதான ஊழியர்கள் அவரை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
26 வயதே நிரம்பிய சோலோஜனோ இதுவரை 40 முதல்தர போட்டிகளில் ஆடியுள்ளார். ட்ரினாட்டைச் சேர்ந்த அவர் 2014ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பையில் ஆடியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹூயூக்ஸ் பந்து தாக்கி மைதானத்திலே சுருண்டு உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அறிமுகப் போட்டியிலே மேற்கிந்திய வீரர் பந்து தாக்கி படுகாயமடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியிலும், கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த சோலோஜனோ விரைவில் குணம் அடைய வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்திப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.