கால்பந்தாட்ட போட்டிகள் வெறும் விளையாட்டு என்பதையும் தாண்டி, கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்வாகவும் உள்ளது. கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியை காண, பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்து இருப்பது, கால்பந்தாட்டின் மீதான அவர்களின் ஆர்வத்தை காட்டுகிறது. ஆனால், அவர்கள் அனைவரையும் மிஞ்சும் வகையில், போலந்தை சேர்ந்த ரசிகர் ஒருவர் அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் பதற்றத்தை தவிர்க்க, அறுவை சிகிச்சையின் போது உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியை பார்த்து ரசித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
போலந்து நாட்டின் கீல்ஸில் உள்ள SP ZOZ MSWiA எனும் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒருவர் தான், இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். பொதுவாக அறுவை சிகிச்சையின் போது நோயாளிகள் பதற்றத்தை விடுத்து நிதானமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துவர். இதற்காக சிலர் அறுவை சிகிச்சையின்போது, இசைக்கருவிகளை வாசிப்பது, பாடல்கள் பாடுவது மற்றும் திரைப்படங்களை பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர். இதுதொடர்பான பல வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் தான், போலந்தின் SP ZOZ MSWiA எனும் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர், இடுப்பிற்கு கீழ் தனக்கு செய்ய உள்ள அறுவை சிகிச்சையின்போது தான் உலகக்கோப்பை போட்டியை காண வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து, உட்புற உடலுறப்புகளுக்கு மட்டும் வலி தெரியாத வகையிலான மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதேநேரம், அறுவை சிகிச்சை அறையிலேயே பெரிய தொலைக்கட்சி அமைக்கப்பட்டு, உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஒளிபரப்பப்பட்டது. 3 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போது, 25 வயதான அந்த நோயாளி ஈரான் மற்றும் வேல்ஸ் நாடுகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியை உற்சாகமாக கண்டு களித்தார். போட்டியில் வேல்ஸ் அணி தோல்வியடைந்த நிலையில், அந்த நபருக்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25ம் தேதி நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கால்பந்து ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை வைரலாக்க, மனதை அமைதிப்படுத்த கால்பந்தாட்ட போட்டியை தவிர வேறு சிறந்த வழியில்லை எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, அறுவை சிகிச்சையின் போது கால்பந்தாட்ட போட்டியை கண்ட நபரின் புகைப்படத்தை, இந்திய தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள்ளார். மேலும், அந்த நபருக்கும் ஏதேனும் ஒரு கோப்பையை வழங்கலாமே எனவும், ஃபிபா அமைப்பிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என தொடங்கிய திருவிழா கொண்டாட்டத்தின் இரண்டாவது சுற்று நிறைவடைந்து, 8 அணிகள் காலிறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.