இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி இந்த தொடரில் முன்னிலை வகித்து வரும் நிலையில், இரு அணிகளும் மோதும் 4வது டெஸ்ட் போட்டி வரும் 23ம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராஃபோர்டில் நடைபெற உள்ளது.
ஜோ ரூட் முன்பு காத்திருக்கும் சாதனை:
இந்த தொடரைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணியின் தூணாக ஜோ ரூட் உள்ளார். சதங்கள், அரைசதங்கள் என விளாசித் தள்ளி வருகிறார். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆதிக்கம் செலுத்தும் வீரராக ஜோ ரூட் உள்ளார். மான்செஸ்டரில் நடைபெற உள்ள 4வது டெஸ்ட் போட்டியில் பல புதிய சாதனைகளை படைக்கும் அரிய வாய்ப்பு ஜோ ரூட்டிற்கு உருவாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை தற்போது சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்துள்ளார். அவர் 15 ஆயிரத்து 921 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ரிக்கி பாண்டிங் 13 ஆயிரத்து 378 ரன்களுடன் உள்ளார். ஜோ ரூட் 13 ஆயிரத்து 259 ரன்களுடன் 5வது இடத்தில் உள்ளார்.
காலியாக போகும் ஜாம்பவான்கள் சாதனை:
தற்போது கிரிக்கெட் ஆடும் வீரர்களிலே அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ஜோ ரூட்டே வைத்துள்ளார். அவர் வரும் மான்செஸ்டர் போட்டியில் இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தென்னாப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் ஜேக் காலீஸ், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆகியோரது சாதனையை முறியடிக்க வாய்ப்புகள் உள்ளது.
மான்செஸ்டரில் நடக்கும் போட்டியில் 30 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட்டை பின்னுக்குத் தள்ளுவார். 31 ரன்களை எடுத்தால் ஜேக் காலீசை முந்துவார். 120 ரன்கள் எடுத்தால் அதிக ரன்கள் எடுத்த ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடிப்பார். அவ்வாறு அவர் சாதனை படைத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த வீரர் என்ற புதிய வரலாற்றை படைப்பார்.
6 ஆயிரம் ரன்கள்:
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தற்போது ஆடாத ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இன்னும் 204 ரன்கள் எடுத்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 6 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.
34 வயதான ஜோ ரூட் இதுவரை 156 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 13 ஆயிரத்து 259 ரன்கள் எடுத்தார். 37 சதங்களும், 66 அரைசதங்களும் விளாசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சராசரியாக 50.8 ரன்கள் வைத்துள்ளார். 34 வயதே ஆன ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.