Asia Cup BCCI: பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளன தலைவர் இந்தியாவின் மீது தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

ஆசிய கோப்பையை புறக்கணிக்கும் இந்தியா?

நடப்பாண்டு இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், போட்டி தொடர்பாக விவாதிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டம், வரும் 24ம் தேதி வங்கதேச தலைநகர் தாக்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த கூட்டத்தில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட சில உறுப்பு நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளன. அரசியல் காரணங்களால் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கூட்டத்தை தாக்காவில் நடத்தினால் தாங்கள் பங்கேற்கமாட்டோம் என, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்விக்கு இந்தியா கடிதம் எழுதியுள்ளதாம். இலங்கை, ஓமன் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 

அடம்பிடிக்கும் பாகிஸ்தான்:

இந்தியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், கூட்டத்தை தாக்காவில் நடத்துவதில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி பிடிவாதமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  கூட்டம் நடத்துவதற்கான இடத்தை மாற்றி அமைக்கவும் முன்வரவில்லை என கூறப்படுகிறது. இந்தியாவின் மீது அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே மொஹ்சின் நக்வின் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் சட்டவிதிகளின்படி, முக்கிய உறுப்பினர்களின் பங்கேற்பு இல்லாமல்  நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் செல்லாததாகக் கருதப்படலாம். இந்த சூழலானது ஆசிய கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இடம் மாற்றப்படுமா?

அறிவிக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளன. ஆனால், கூட்டத்திற்கான இடத்தை மாற்றுவது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் தற்போது வரை எந்த புதிய தகவல்களையும் வெளியிடவில்லை. கடைசி நேரத்தில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமா? அல்லது ஆசிய கோப்பை போட்டி ஒத்திவைக்கப்படுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆசிய கோப்பை 2025:

கடந்த 2023ம் ஆண்டு ஒருநாள் போட்டி வடிவில் நடைபெற்ற ஆசியக் கோப்பை, பாகிஸ்தானில் நடைபெறவிருந்தது. ஆனால், அங்கு செல்ல மறுத்ததால், இந்திய அணிக்கான போட்டிகள் இலங்கையில் நடைபெற்றது. அதன் இறுதிப்போட்டியில் இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. அதன்படி, நடப்பாண்டு போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது. டி20 வடிவில் 6 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி செப்டம்பர் மாதம் நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான போட்டி அட்டவணை மற்றும் மைதானங்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்துவதில் தான் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இருநாடுகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாட்டால் தான், ஆகஸ்டில் வங்கதேசத்தில் இந்திய அணி மேற்கொள்ளவிருந்த பயணம் அடுத்த ஆண்டு செப்டம்பருக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, நடப்பாண்டு தொடக்கத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் பங்கேற்க மறுத்து, தனக்கான அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.