நடப்பாண்டு தொடக்கத்தில் நடைபெற இருந்த இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரானது, அந்நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார சூழல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதைதொடர்ந்து, 6 அணிகள் பங்கேற்கும் 24 போட்டிகள் கொண்ட இந்த தொடர் கடந்த 6ம் தேதி தொடங்கியது. பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த வீரர்களும், இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் தொடரின் இரண்டாவது போட்டியிலேய, கண்டி ஃபால்கன்ஸ் அணிக்காக விளையாடும் ஹசரங்கா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த, தொடர் சூடுபிடித்தது.
இந்நிலையில் தான், கடந்த தொடரில் இரண்டாம் இடம் பிடித்த காலி கிளாடியேட்டர்ஸ் அணி தனது லீக் போட்டியில் புதியதாக இணைந்துள்ள கண்டி ஃபால்கன்ஸ் அணியை எதிர்கொண்டது. போட்டியில் டாஸ் வென்ற கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ், பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனிடையே, முதல் இன்னிங்ஸின் நான்காவது ஓவரில் ஃபால்கன்ஸ் அணியின் கார்லஸ் பிராத்வெயிட் வீசிய பந்தை, நுவனிது ஃபெர்னாண்டஸ் அடிக்க பந்து பல அடி உயரத்திற்கு வானில் பறந்தது.
முகத்தில் பட்டு ரத்த காயம்:
பந்தை கேட்ச் பிடிக்க சமிகா கருணரத்னே பின்புறமாக ஓடிச்சென்றபோது, வானில் இருந்து இறங்கிய பந்து எதிர்பாராத விதமாக அவரது வாயில் பட்டது. ஆனாலும், நொடி நேரத்தில் அந்த பந்தை கேட்சி பிடித்த கருணரத்னே, அதனை சக வீரரிடம் தூக்கி போட்டார். இதற்குள் அவரது வாயில் இருந்து ரத்தம் பொளபொளவென கொட்டியது. ரத்தத்தை துடைக்க முயன்றபோது, அவரது வாயில் இருந்து பற்கள் உடைந்து அவரது கையில் விழுந்தன. இதையடுத்து அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனையில் கருணரத்னேவின் நான்கு பற்கள் உடைந்து விட்டதாகவும், இதுதொடர்பாக அறுவை சிகிச்சை செய்ய உள்ள நிலையில், மற்றபடி அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஃபால்கன்ஸ் அணி வெற்றி:
இதனிடையே, கிளாடியேட்டர்ஸ் அணி நிர்ணயித்த 122 ரன்கள் எனும் இலக்கை கருணரத்னேவின் ஃபால்கன்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவிலேயே எட்டி, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் அந்த அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும். கடந்த 2019ம் ஆண்டு முதல் இலங்கை அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் கருணரத்னே இதுவரை, 18 ஒருநாள் போட்டிகள், 31 இருபது ஓவர் போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளார். ஆல்-ரவுண்டரான கருணரத்னே, கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.