ஐசிசி டி20 உலகக் கோப்பை:
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நாளை (ஜூன் 2) முதல் போட்டி தொடங்க உள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் கனடா மோதுகிறது. இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்பு நியூ ஜெனியா மோதுகின்றன. அதன்படி இந்திய அணி தங்களது முதல் போட்டியில் ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அதிவேகமாக அரைசதம் விளாசிய வீரர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
யுவராஜ் சிங்:
இந்திய அணியின் அதிரடி வீரர்களின் ஒருவர் யுவராஜ் சிங். ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அதிவேகமாக அரைசதம் விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையை இப்போதுவரை தன் வசம் வைத்திருப்பவர். கடந்த 2007ம் ஆண்டு டி20 உலககோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டிருந்தார்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை நாலாபுறமும் அடித்து நொறுக்கிய யுவராஜ் சிங், இதே போட்டியில் அவர் 12 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதன்மூலம், சர்வதேச டி20 வரலாற்றில் அதிவேக அடிக்கப்பட்ட அரைசதம் இது ஒன்றே ஆகும். 17 ஆண்டுகளாகியும் இந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.
ஸ்டீபன் மைபூர்க்:
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அதிரடி பேட்டர் ஸ்டீபன் மைபூர்க் தான் அதிவேகமாக அரைசதம் விளாசிய இரண்டாவது வீரராக இருக்கிறார். இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் 17 பந்துகளில் அரைசதம் விளாசினார். அயர்லாந்து அணிக்கு எதிராக இந்த சாதனையை படைத்தார் ஸ்டீபன் மைபூர்க்.
மார்கஸ் ஸ்டோய்னிஸ்:
ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 17 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்திருக்கிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் தான் இந்த சாதனையை செய்தார். இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய இவர் 17 பந்துகளில் அரைசதம் விளாசியதன் மூலம் அதிவேகமாக அரைசதம் விளாசிய இரண்டாவது வீரராக இருக்கிறார்.
கிளென் மேக்ஸ்வெல்:
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடினார் கிளென் மேக்ஸ்வெல். இந்த போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் விளாசியதன் மூலம் அதிவேகமாக டி20 உலகக் கோப்பையில் அரைசதம் விளாசிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் கிளென் மேக்ஸ்வெல்.
கே.எல்.ராகுல்:
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் 18 பந்துகளில் அரைசதம் விளாசினார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக இந்த சாதனையை செய்தார் கே.எல்.ராகுல். இதன் மூலம் அதிவேகமாக அரைசதம் விளாசிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இச்சூழலில் அதிவேகமாக அரைசதம் விளாசிய யுவராஜ் சிங்கின் சாதனையை இந்த உலகக் கோப்பையில் எந்த வீரர்களாவது முறியடிப்பார்களா இல்லை யுவராஜ் சிங்கின் சாதனை தொடருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.