இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக (ஜூன் 1) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல் நாயகன்:
இந்திய கிரிக்கெட் அணி வீரர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரர் தினேஷ் கார்த்திக். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இவர் இந்திய அணியில் கடந்த 2004 ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன்படி தன்னுடைய னது 19வது வயதில் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் நடந்த ஒரு நாள் போட்டியில் தேசிய அளவில் அறிமுகமானார்.
அதேபோல் ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியவர் இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். அதன்படி ஆர்சிபி அணியின் அதிரடி ஆட்டக்காரராக இருந்து அந்த அணி ரசிகர்களை கவர்ந்தார்.
தினேஷ் கார்த்திக் 94 ஒருநாள் போட்டிகளில் 1,792 ரன்கள் மற்றும் ஒன்பது அரைசதம் அடித்துள்ளார். டெஸ்டில், கார்த்திக் 42 இன்னிங்ஸ்களில் வங்கதேசத்திற்கு எதிரான சதம் உட்பட 1,025 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் 60 ஆட்டங்களில் 686 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல் 2006/07 மற்றும் 2020-21 இல் இரண்டு முறை கேப்டனாக சையத் முஷ்டாக் அலி டிராபி, டி20 போட்டியை வென்றார். ஐபிஎல்லில் 257 போட்டிகளில் விளையாடி 26.32 சராசரியில் 4,842 ரன்கள் எடுத்திருக்கிறார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு:
முன்னதாகவே ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தினேஷ் கார்த்திக் இன்று அவருடைய பிறந்த நாளன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாள்களாக எனக்குக் கிடைத்து வரும் அன்பும், ஆதரவும் உண்மையில் நெகிழ்ச்சியடைய வைத்தது.
என்னை இப்படி உணர வைத்ததற்காக ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சார்ந்திருக்கும் அனைத்து விதமான கிரிக்கெட் விளையாட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். என் நீண்ட பயணத்தில் உடனிருந்த பயற்சியாளர்கள், கேப்டன்கள், தேர்வுக்குழுவினர், சக வீரர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி. ” எனத் தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.