IND Vs USA, T20 Worldcup: இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் மோத உள்ள லீக் போட்டி, நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.


ஐசிசி டி-20 உலகக் கோப்பை:


ஐசிசி ட்-20 உலகக் கோப்பை தொடங்கி, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை குரூப் - ஏ, குரூப் - பி, குரூப் - சி மற்றும் குரூப் - டி என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்றைய லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் உள்ள இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோத உள்ளன.


இந்தியா - அமெரிக்கா பலப்பரீட்சை:


இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதும் போட்டி, நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி, இரவு 8 மணிக்கு இப்போட்டி தொடங்க உள்ளது. லீக் சுற்றில் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று, இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன. இன்றைய போட்டியிலும் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வதோடு, சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் உறுதிப்படுத்த இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


பலம், பலவீனங்கள்..!


அயர்லாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம் குரூப் ஏ பிரிவில் இந்திய அணி வலுவாக திகழ்கிறது. அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 97 ரன்கள் என்ற சொற்ப இலக்கை எளிதில் எட்டி அசத்தியது.  பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெறும் 119 ரன்களுக்கு சுருண்டாலும், அபாரமான பந்துவீச்சு திறனை வெளிப்படுத்தி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதனால், இந்திய அணி பந்துவீச்சில் அசுர பலத்துடன் உள்ளது. அதேநேரம், இன்றைய போட்டியில் கோலி, ரோகித் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இன்றைய போட்டியில் வெற்றி பெற முடியும்.


மறுபுறம், அமெரிக்க வீரர்கள் தங்கள் அற்புதமான திறமையால் கிரிக்கெட் உலகை ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் போட்டியில் கனடாவுக்கு எதிராக 195 ரன்கள் இலக்கை துரத்தியது. இந்த ஆண்டு போட்டியில் இதுவே அதிகபட்ச ரன் சேஸிங்காக தொடர்கிறது.  சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை தோற்கடித்த மோனாங்க் படேலின் கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்தனர். இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளில் குறைந்தபட்சம் ஒன்றில் வெற்றி பெற்றால், அமெரிக்கா சூப்பர் எட்டு கட்டத்தை எட்ட முடியும். அமெரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன்கள், இந்தியாவின் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை சமாளிப்பார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


மைதானம் எப்படி?


மைதானத்தில் போட்டியை காண ரசிகர்கள் குவிந்தாலும், ஆடுகளங்கள் அதற்கேற்றார் போல் அமையவில்லை. சில தீவிரமான லோ-ஸ்கோரிங் போட்டிகள் இருந்தபோதிலும், சில மந்தமான போட்டிகளும் உள்ளன.  பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் சேர்ப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. பந்துவீச்சாளர்களுக்கு இந்த ஆடுகளம் பெரிதும் சாதகமாக உள்ளது.


உத்தேச பிளேயிங் லெவன்:


இந்தியா: ரோகித் ஷர்மா , விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்


அமெரிக்கா: ஸ்டீவன் டெய்லர், மோனாங்க் படேல், ஆண்ட்ரீஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், நிதிஷ் குமார், நோஸ்துஷ் கென்ஜிகே, அலி கான், சௌரப் நேத்ரவல்கர், ஜஸ்தீப் சிங்