IND Vs ENG 2nd Test Edgbaston: இங்கிலாந்து அணிக்கு 500 ரன்கள் இலக்கை நிர்ணயித்து இந்திய அணி வெற்றி பெறுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தள்ளாடிய இங்கிலாந்து அணி:
எட்க்பஸ்டன் டெஸ்டில் முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி, 587 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, இரண்டாவது நாள் முடிவில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியதும், மேலும் இரண்டு விக்கெட்டுகளை ஒரே ஓவரில் இழக்க, 84 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் சிக்கியது. இதன் மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பெரும் முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
300 ரன்கள் பார்ட்னர்ஷிப்:
ஆனால், 6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் ப்ரூக் பொறுப்பான ஆட்டத்தை ஆடியதோடு, அதிரடியாகவும் ரன் சேர்த்தனர். இந்த கூட்டணியை பிரிக்க இந்திய அணி எடுத்த பல முயற்சிகளும் வீணாய்போக, ஸ்மித் மற்றும் ப்ரூக் ஆகியோர் அடுத்தடுத்து சதமடித்து அசத்தினர். அணியின் ரன்களும் கிடுகிடுவென உயர்ந்தது. 158 ரன்கள் எடுத்து இருந்தபோது ப்ரூக் ஆட்டமிழக்க, இந்த கூட்டணி 303 ரன்களை குவித்து இங்கிலாந்து அணி வலுவான நிலையை எட்ட முக்கிய பங்களித்தது. இதையடுத்து வந்த வீரர்களில் வோக்ஸ் மட்டும் 5 ரன்களை சேர்க்க, மற்ற மூன்று வீரர்களும் டக்-அவுட்டாகினர். இதனால், இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது ஸ்மித் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 184 ரன்களை குவித்தார். இந்திய சார்பில் சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
244 ரன்கள் முன்னிலை:
இதையடுத்து 180 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 22 பந்துகளில் 28 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி 64 ரன்களை சேர்த்து இருந்தது. ஒட்டுமொத்தமாக 244 ரன்கள் முன்னிலையுடன் இருக்க, கே.எல். ராகுல் 28 ரன்களையும், கருண் நாயர் 7 ரன்களையும் எடுத்து களத்தில் உள்ளனர்.
500 ரன்களை இலக்காக்குமா இந்தியா?
மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருப்பதால், போட்டியின் நான்காவது இன்னிங்ஸிலும் அதிரடியாக ரன் குவிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேமாதிரியான பேட்டிங்கிற்கு சாதகமான லீட்ஸ் மைதானத்தில், இங்கிலாந்து அணி நான்காவது இன்னிங்ஸில் 373 ரன்களை சேஸ் செய்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த போட்டியில் வெல்ல இந்திய அணி குறைந்தபட்சம் 500 ரன்களையாவது இலக்காக நிர்ணயிக்க வேண்டும். அப்படி செய்து, இந்த போட்டியில் வென்று இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கில் தலைமயிலான அணி அதை சாதிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.