IND Vs ENG 2nd Test Edgbaston: எட்க்ஸ்பஸ்டன் டெஸ்டின் இரண்டாவது நாள் முடிவில், இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை சேர்த்துள்ளது.

கில் - ஜடேஜா கூட்டணி அபாரம்:

எட்க்பஸ்டன் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி, முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியதும், கில் மற்றும் ஜடேஜா கூட்டணி மீண்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் மூலம் ஜடேஜாவும் இந்த தொடரில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அணி வலுவான நிலையை எட்ட உதவிய ஜடேஜா, 89 ரன்களை சேர்த்து இருந்தபோது ஆட்டமிழந்தார். இந்த கூட்டணி 6வது விக்கெட்டிற்கு 213 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

மிரட்டி விட்ட கில்:

மறுமுனையில் கேப்டன் கில் நிலைத்து நின்று அதிரடியாக ரன் சேர்த்தார். எந்தவொரு தவறும் செய்யாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை நையப்புடைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம், கேப்டனாக தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் பதிவு செய்த முதல் இரட்டை சதமாகும்.முன்னாள் கேப்டன் கோலி அதிகபட்சமாக 7 இரட்டை சதங்களை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோலியை தொடர்ந்து வெளிநாட்டு மண்ணில் இரட்டை சதம் விளாசிய இந்திய கேப்டன் என்ற பெருமையையும் கில் பெற்றுள்ளார். அவருக்கு ஆதரவாக விளையாடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், 42 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணி ஆல்-அவுட்

அதேநேரம், தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த கில் 269 ரன்கள் சேர்த்து இருந்தபோது, ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் சேர்த்த கேப்டன் என்ற விராட் கோலியின் (254 ரன்கள்) சாதனையை கோலி முறியடித்தார். கில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, இந்திய அணி 587 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. வழக்கம்போல் டெயில் எண்டர்கள் யாரும் பெரிதாக ரன் சேர்க்காமல் சொதப்பினர்.

தடுமாறிய இங்கிலாந்து - ஆகாஷ் தீப் அதிரடி:

தொடர்ந்து, களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பதே சறுக்கலாக அமைந்தது. கடந்த போட்டியில் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த டக்கெட்டை, ஆகாஷ் தீப் டக்-அவுட் ஆக்கி அசத்தினார். அவரை தொடர்ந்து வந்த போப்பையும் முதல் பந்திலேயே பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். இதனால் 13 ரன்களை சேர்ப்பதற்குள்ளாகவே இங்கிலாந்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான க்ராவ்லி, 19 ரன்கள் சேர்த்து இருந்தபோது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும் நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால், இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை சேர்த்துள்ளது. இந்திய அணி 510 ரன்கள் முன்னிலையில் உள்ளது.