NZ ODI WC 2023 Jersey: ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருப்பது, வரும் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி முதல் இந்தியாவில் தொடங்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்காகத்தான். இந்த தொடருக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மொத்தம் 12 மைதானங்களை மிகவும் தீவிரமாக சீர் செய்துவருகிறது. இந்திய மைதானங்கள் பொதுவாகவே பேட்டிங்கிற்கு சாதகமாகத்தான் இருக்கும். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் காத்துக்கொண்டு இருக்கும் இந்த தொடரில் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்தால் மட்டும்தான், ரசிகர்களை மேலும் மேலும் கவர முடியும் என்ற எண்ணத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாக செயலாற்றி வருகிறது என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பையில் களமிறங்கவுள்ள 10 அணிகளும் தங்களது அணி குறித்த ஒவ்வொரு அப்டேட்டையும் தெரிவித்துக்கொண்டு உள்ளனர். தற்போதுவரை பெரும்பாலான அணிகள் அனைத்தும் உலகக்கோப்பைக்கான தங்களது அணியை அறிவித்துவிட்டனர். இதைத் தொடர்ந்து சில அணிகளில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அந்தந்த அணிகள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து உலகக்கோப்பைக்கு முன் தயார்படுத்திடவும் முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகின்றனர்.
உலகக்கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் இரண்டு வாரங்கள் மட்டும் உள்ள நிலையில், நியூசிலாந்து அணி இந்த உலகக்கோப்பைக்கு தங்களது அணி அணிந்து விளையாடவுள்ள ஜெர்சியை அறிவித்துள்ளது. அதில் வழக்கம்போல் கருப்பு நிற ஜெர்சியாக இருந்தாலும், அதன் இடது புறத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் இலச்சினையும், வலது புறத்தில் ஐசிசி உலகக்கோப்பை இந்தியா 2023 எனவும் இடம் பெற்றுள்ளது. ஜெர்ஸியின் மார்பு பகுதிக்கு கீழ் நியூசிலாந்து என்ற பெயர் இடம் பெற்றுள்ளது.
ஏற்கனவே நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் இம்முறை உலகக்கோப்பையில் களமிறக்க தேர்வு செய்த 15 பேர் கொண்ட அணியை, வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மூலம் வீடியோவாக வெளியிட்டு அறிவித்தது. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
உலகக்கோப்பைக்கான நியூசிலாந்து அணி
கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ் (விக்கெட் கீப்பர்), டிரென்ட் போல்ட், டிம் சவுதி, மிட்செல் சான்ட்னர், ஜிம்மி நீஷம், டேரில் மிட்செல், வில் யங், மார்க் சாப்மேன், ரச்சின் ரவீந்திர, லாக்கி பெர்குசன், இஷ் சோதி, மாட் ஹென்றி.
நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரையில் இதுவரை உலகக்கோப்பை வெல்லாத அணிகளில் ஒன்றாகத்தான் உள்ளது. மிகவும் பலமான அணியாக ஒவ்வொரு முறையும் இந்த அணி களமிறங்கினாலும், இந்த அணியால் கோப்பைக்கு அருகில் வரை செல்லத்தான் முடிகிறது. ஆனால் கோப்பையில் தங்களது பெயரை பதிக்க முடியவில்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போதும், 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பையின்போதும் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டி வரை சென்று இரண்டு முறையும் கோப்பையை இழந்தது.
இம்முறை இந்தியாவில் உலகக்கோப்பைத் தொடர் நடைபெறுவதால், கோப்பையை கைப்பற்ற நியூசிலாந்து அணி முழு மூச்சில் செயல்படும் என எதிர்பார்க்கலாம். நியூசிலாந்து அணி வீரர்களுக்கு இந்தியாவில் ஐபிஎல் தொடர் விளையாடிய அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.