2023 ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான சூப்பர் ஃபோர் மோதலின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இருந்து முழுமையாக வெளியேறவுள்ளார் என்று கூறப்படுகிறது.
நசீம் ஷாவுக்கு காயம்:
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்தது. அப்போது, 46வது ஓவரின் போது அவரது வலது தோள்பட்டையில் நசீம் ஷாவுக்கு காயம் ஏற்பட்டது மற்றும் பிசியோதெரபிஸ்ட்கள் முதலில் அவருக்கு முதலுதவி செய்தனர். ஆனால் அது அவருக்கு வலியில் இருந்து எந்தவிதமான பலனையும் தராததால், அதன் பின்னர் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
இதையடுத்து அவர் அந்த போட்டி மட்டும் இல்லாமல், இலங்கைக்கு எதிரான போட்டியிலும் விளையாடவில்லை. இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியதால், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பினைப் பெறமுடியாமல் போய்விட்டது.
உலகக்கோப்பையில் விலகலா?
இந்நிலையில், வரும் அக்டோபரில் இந்தியாவில் தொடங்கவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா போட்டியை இழக்க வாய்ப்புள்ளது என்ற தகவல் ஆங்கில ஊடங்களில் வெளியாகியுள்ளது. ஏனெனில் துபாயில் சமீபத்திய ஸ்கேன்கள் அவரது வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளது என்று தெரியவந்துள்ளதாம். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த விஷயத்தில் இரண்டாவது கருத்தை கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தற்போதுள்ள ஸ்கேன் ரிப்போர்ட்டின்படி, நசீம் ஷா 2023 ஆம் ஆண்டில் மீதமுள்ள காலத்திற்கு பந்து வீச முடியாது என கூறப்படுகிறது.
உலகக் கோப்பையில் நசீம் இல்லாதது உறுதிசெய்யப்பட்டால், பாபர் அசாம் தலைமையிலான அணிக்கு இது ஒரு பெரிய இழப்பாக பார்க்கப்படும். நசீம் ஷா, ஹரிஸ் ரவுஃப் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடியுடன் சேர்ந்து உலகை அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சாளர்களாக கிரிக்கெட் உலகில் வளம் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் படையில் நசீம் ஷா முக்கியமான வீரர் ஆவார்.
நசீம் உலகக் கோப்பையைத் தவறவிடுவார் எனில், இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் டெஸ்ட் தொடரிலும், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) அடுத்த சீசனிலும் அவர் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என கூறப்படுகிறது.
உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி
பாபர் அசாம் (கேப்டன்), ஃபகர் ஜமான், இமாம்-உல்-ஹக், சல்மான் அலி ஆகா, இப்திகார் அகமது, சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான், முகமது ஹாரிஸ், ஷதாப் கான், முகமது நவாஸ், உசாமா மிர், ஹரிஸ் ரவூப், முகமது வாசிம் ஜூனியர், முகமது நசீம் ஷா மற்றும் ஷாஹீன் அப்ரிடி.
Watch Video: "சேட்டை பிடிச்ச பையன் சார்.." வாட்டர் பாயாக வந்து வாலுத்தனம் செய்த கோலி..!