காயத்தில் இருந்து இன்னும் மீளாத லெக் ஸ்பின்னர் உஸ்மான் காதிருக்குப் பதிலாக, வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் அதிரடி பேட்ஸ்மேன் ஃபக்கர் ஜமான் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


உலகக்கோப்பை காயங்கள்


டி20 உலக கோப்பை நாளை தொடங்கி நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், வீரர்களின் ஃபிட்னெஸ் மிக அவசியமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா, தென்னாப்பிரிக்க அணியில் ஆல்ரவுண்டர் பிரிட்டோரியஸ் ஆகியோர் காயம் காரணமாக கடைசி நேரத்தில் டி20 உலக கோப்பையிலிருந்து விலகியுள்ளனர். மேலும் ஜடேஜா, ஜானி பேர்ஸ்டோ ஆகிய வீரர்களும் காயம் காரணமாக டி20 உலக கோப்பைக்கான அணியிலேயே இடம்பெறவில்லை. நேற்று தலையில் அடிபட்ட நிலையில் டேவிட் வார்னரும் களமிறங்குவாரா? இல்லையா? என்னும் கேள்வி எழுந்தது வருகிறது.



பாகிஸ்தான் அணி - காயங்கள்


பாகிஸ்தான் அணியில் உலகக்கோப்பைக்கு முன்பாக பல வீரர்கள் காயத்தில் இருந்தனர். அவர்களில் ஒவ்வ்வொருவராக தற்போது மீண்டு வர, கடைசி வரை பாகிஸ்தான் அணி வீரர்கள் பட்டியலில் மாற்றம் செய்து வருகிறது. சமீபத்தில் தான் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அஃப்ரிடி காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவுதாக அறிவிக்கப்பட்டார். தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஃபக்கர் ஜமான் 15 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ டி20 உலகக் கோப்பை அணியில் ஒரு பகுதியாக இருப்பார் என்று கூரியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: TN Rain Alert: இன்னும் 5 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கப் போகுது கனமழை...! குடையோடு வெளியில போங்க..!


உஸ்மான் காதிர் - ரிசர்வ் பிளேயர்


அதே நேரத்தில் கட்டைவிரலில் முறிவு ஏற்பட்ட நிலையில் இருந்து மீண்டு வரும் உஸ்மான் காதிர் ரிசர்வ் வீரர்களில் சேர்க்கப்படுகிறார். “செப்டம்பர் 25 அன்று கராச்சியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் உஸ்மான் காதிருக்கு ஏற்பட்ட வலது கட்டை விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவில் இருந்து இன்னும் மீளாததால் இந்த மாற்றம் தேவைப்படுகிறது. உஸ்மான் காதிர் அக்டோபர் 22க்கு முன் உடல் தகுதி பெறமாட்டார்” என்று பிசிபி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.



பயிற்சிப் போட்டியில் உடற்தகுதி மதிப்பீடு


ஃபக்கர் ஜமான் சனிக்கிழமையன்று ஷஹீன் ஷா அப்ரிடியுடன் சேர்ந்து லண்டனில் இருந்து பிரிஸ்பேனுக்கு வருவார் என்றும், இங்கிலாந்து (அக்டோபர் 17) மற்றும் ஆப்கானிஸ்தான் (அக்டோபர் 19) ஆகிய இரு அணிகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டிகளுக்கான தேர்வில் கலந்துகொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த போட்டியின்போது அணி நிர்வாகம் அவரது உடற்தகுதியை மதிப்பீடு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பீல்டிங்கின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டதால், சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 ஐ தொடரில் இருந்து ஜமான் வெளியேறினார். இரண்டு பயிற்சி ஆட்டங்களில் அப்ரிடியின் உடற்தகுதியும் சோதிக்கப்படும். காலேயில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது பீல்டிங் செய்யும்போது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் ஜூலை நடுப்பகுதியில் இருந்து அவர் விளையாடவில்லை. 


பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை அணி: பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிப் அலி, ஃபக்கர் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் , நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் ஷான் மசூத்.