தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 16 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை , கரூர், ஈரோடு, சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 16-ந் தேதி வரை தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களிலும், வட உள்மாவட்டங்களிலும் இந்த கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த 5 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்வதற்கான வாய்ப்புகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






சென்னையை பொறுத்தமட்டில் வானம் அடுத்த 48 மணிநேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தமிழ்நாட்டிலே அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குமாரபாளையும், பென்னகரம், திருச்சியிலும் மழை அதிகளவில் பெய்துள்ளது.




டெல்டா மாவட்டங்கள், மதுரை, தூத்துக்குடியில் சில பகுதிகளில் அதிகளவு மழை பெய்துள்ளது. குமரிக்கடலில் தெற்கு பகுதியில் சூறாவளிக்காற்று 40 கிலோ மீட்டர் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  


கடந்த 24 மணிநேரத்தில் கோயம்புத்தூர் சின்னக்கல்லாரில் 10 சென்டி மீட்டரும், நாமக்கல் குமாரபாளையம், தருமபுரி பென்னாகரம், திருச்சி தென்பரநாடு ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீட்டரும், கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தலா 6 செ.மீட்டரும், அரியலூர் பகுதியில் திருமானூர், ஈரோடு பவானி, வேலூர், விருதுநகர் பிளவக்கல் ஆகிய பகுதியில் தலா 3 செ.மீட்டரும் மழை பெய்துள்ளது.




14-ந் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், ஈரோடு, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  


மேலும் படிக்க : "திருக்குறளை தீர்த்துக்கட்டவே தமிழ்நாடு வந்திருக்கிறார் போல ஆளுநர்" - முரசொலி கடும் விமர்சனம்


மேலும் படிக்க : "மழை மேம்... லீவு விட்டா கோயில் கட்றேன் என் மனசுல" - புதுக்கோட்டை ஆட்சியரிடம் இன்ஸ்டாவில் கெஞ்சிய மாணவர்கள்..!