இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய அணி முதல் முறையாக வென்று 58 ஆண்டுக்கால சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
2வது டெஸ்ட் போட்டி
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி 587 ரன்களை குவித்த நிலையில், இங்கிலாந்து 407 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
608 ரன்கள் இலக்கு:
இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ்சில் இந்திய அணி சுப்மன் கில்லின் அபார சதத்தால் இந்தியா 427 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதனால், இந்தியா இங்கிலாந்திற்கு 608 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இதே மைதானத்தில் கடைசியாக இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய போது 378 ரன்களை எட்டி இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்தியது.
தடுமாறிய இங்கிலாந்து:
இரண்டாவது இன்னிங்ஸ்சை நேற்று தொடங்கிய இங்கிலாந்து அணி கிராவ்லி, டக்கெட் மற்றும் முக்கிய வீரர் ஜோ ரூட் ஆகியோரது விக்கெட்டை இழந்தது. 72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி தடுமாறியாது,
மிரட்டிய மழை:
இன்றைய நாள் தொடக்கத்தில் மழையின் காரணமாக கடைசி நாள் ஆட்டம் நடைப்பெறுமா என்கிற சந்தேகம் எழுந்த நிலையில் ஒன்றரை மணி நேர தாமதமாக போட்டி தொடங்கியது.
அசத்திய ஆகாஷ் தீப்:
இன்றைய நாள் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய அணியை வெற்றியின் பக்கம் இழுக்க ஆரம்பித்தார் ஆகாஷ் தீப் நன்றாக விளையாடிய ஒல்லி போப், ஹாரி புரூக் ஆகியோர் விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். பேட்டிங்கிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இந்த ஆடுகளத்தில் ஆகாஷ் தீப் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு தண்ணீ காட்டினார்.
போராடிய ஸ்மித்:
அடுத்து வந்த கேப்டன் ஸ்டோக்ஸ் சிறிது நேரம் தாக்குப்பிடித்தாலும் 33 ரன்களுக்கு வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் வெளியேறினார், ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் ஜேமி ஸ்மித் போராடி இந்தியாவின் வெற்றியை தாமதப்படுத்தி கொண்டே இருந்தார். முதல் இன்னிங்ஸ்சில் சதம் அடித்த அவர் இரண்டாவது இன்னிங்ஸ்சில் அரைசதம் கடந்து ஆகாஷ் தீப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்தியா வெற்றி:
கார்ஸ் மட்டும் சிறிது நேரம் போராடிய நிலையில் ஆகாஷ் தீப் கடைசி விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேலும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கடந்த 58 ஆண்டுகளில் 9 முறை விளையாடியுள்ள இந்திய அணி முதல் முறையாக வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்துள்ளது.
வரலாற்று வெற்றி:
இந்திய அணி வெளிநாட்டு மைதானங்களில் அதிக ரன்கள்(336) ரன்கள் வித்தியாசத்தில் வென்ற போட்டியாக மாறியுள்ளது. இதற்கு முன்னர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆன்டிகுவாவில் 2019 ஆம் ஆண்டு 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. இது மட்டுமில்லாமல் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் வென்ற முதல் ஆசிய கேப்டான் என்கிற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்