உலகில் அதிகளவு ரசிகர்களை கொண்ட விளையாட்டுகளில் டென்னிஸ் மிகவும் முக்கியமானது ஆகும். டென்னிஸ் போட்டிகளிலே மிகவும் கவுரவம் வாய்ந்த தொடராக கருதப்படுவது லண்டனில் நடத்தப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர்.
விம்பிள்டனில் 100 வெற்றி:
இந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், விம்பிள்டன் தொடரில் செர்பிய நாட்டைச் சேர்ந்த ஜாம்பவான் வீரர் ஜோகோவிச் புது வரலாறு படைத்துள்ளார். அதாவது, நேற்று நடந்த போட்டியில் அவர் சக நாட்டு வீரரான மியோமிர் கெக்மானோவிக்கை 6-3, 6-0, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன்மூலம் விம்பிள்டன் தொடரில் மட்டும் 100 வெற்றிகளைப் பெற்ற வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
பெடரரை துரத்தும் ஜோகோவிச்:
ஜோகோவிச்சிற்கு முன்பு இந்த சாதனையை புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனையும் செக்கோஸ்லோவியா மற்றும் அமெரிக்காவிற்காக ஆடிய மார்ட்டினா நவரத்தினலோவா மற்றும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மட்டுமே படைத்துள்ளனர். அவர்கள் இருவரும் 105 வெற்றிகளை பெற்றுள்ளனர். இந்த வரிசையில் தற்போது விம்பிள்டனில் 100 வெற்றிகளைப் படைத்த 3வது வீரர் என்ற சாதனையை ஜோகோவிச் பெற்றுள்ளார்.
உலகின் புகழ்வாய்ந்த டென்னிஸ் வீரர்களான ரோஜர் பெடரர், நடால் ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் ஜோகோவிச் மட்டுமே தற்போது ஆடி வருகிறார். அவர் இதுவரை 7 விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மார்ட்டினா நவரத்தினலோவா 9 விம்பிள்டன் பட்டங்களையும், பெடரர் 8 விம்பிள்டன் பட்டங்களையும் வென்றுள்ளனர்.
அதிக கிராண்ட்ஸ்லாம்:
ஆடவர் டென்னிஸ் வரலாற்றில் உலகளவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனையை 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் ஜோகோவிச் தன்வசம் வைத்துள்ளார். இந்த விம்பிள்டன் தொடரை அவர் வென்றால் 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று புது வரலாறு படைப்பார்.
மகளிர் டென்னிசிலும் மார்க்ரெட் கோர்ட் 24 கிராண்ட்ஸ்லாம் பெற்றதே இதுவரை அதிகம் ஆகும். இதனால், விம்பிள்டன் மகுடத்தை கைப்பற்றினால் உலகிலேயே ஆடவர் மற்றும் மகளிர் என இரண்டு பாலினத்திலும் அதிக கிராண்ட்ஸ்லாம் பெற்ற ஒரே நபர் என்ற சாதனையை ஜோகோவிச் படைப்பார்.
குவியும் வாழ்த்து:
விம்பிள்டன் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை ரோஜர் பெடரர் 8 பட்டங்களுடன் தன்வசம் வைத்துள்ளார். இந்த தொடரை ஜோகோவிச் கைப்பற்றினால் ரோஜர் பெடரரின் சாதனையை அவர் சமன் செய்வார். விம்பிள்டனில் 100 வெற்றிகளைப் பதிவு செய்த ஜோகோவிச்சிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
38 வயதான ஜோகோவிச் விம்பிள்டன் மட்டுமின்றி அமெரிக்க ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், ப்ரெஞ்ச் ஓபன் உலகின் புகழ்வாய்ந்த 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் பல முறை வென்று அசத்தியுள்ளார்.