Ben Stokes: டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலக கோப்பையை குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. 


இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டு வருபவர் பென் ஸ்டோக்ஸ். இவர் இந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர். இவர் இங்கிலாந்து அணி வென்ற இரண்டு உலக கோப்பை போட்டியிலும் மிக முக்கியமான பங்களிப்பினை அளித்துள்ளார். அதிலும் குறிப்பாக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டித் தொடரினை வென்று இங்கிலாந்து அணியை ’’டாப் ஆஃப் த வோர்ல்ட்’’ என்ற நிலைக்கு உயர்த்தியதில் பென் ஸ்டோக்ஸின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. 


தற்போது நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு பென் ஸ்டோக்ஸ் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். 31 வயதான பென் ஸ்டோக்ஸ் தனது முடிவினை மாற்ற இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தற்போதைய கோச் மேத்யூ மேட் அறிவுறுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 






டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் விளாசியுள்ளார். மேலும், 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நியுசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் விளாசி இங்கிலாந்து அணி உலககோப்பையை முதல் முறை வெல்ல முக்கியக் காரணமானார். 


 தனது ஓய்வு குறித்து பென் ஸ்டோக்ஸ் பயிற்சியாளர் மேத்யூ மேட்டிடம் தெரிவிக்கும்போது, அதற்கு பதிலளித்த மேத்யூ மேட் “நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம், நான் அதை மதிக்கிறேன். இது உலகக்கோப்பை வருடம் எந்த முடிவானாலும் நன்கு யோசித்து எடுங்கள்” எனக் கூறியுள்ளார்.


ஆனால் பென் ஸ்டோக்ஸ் தனது ஓய்வு முடிவினை மாற்றி தான் தொடர்ந்து ஒரு நாள் போட்டியில் விளையாட முடிவு செய்தால் மற்ற அணிகளுக்கு எதிராக பெரும் சிம்ம சொப்பனமாக இருப்பார் என்பது நிதர்சனம். அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலககோப்பையை இங்கிலாந்து வெல்ல பென் ஸ்டோக்ஸ் அணியில் இருப்பது மிகவும் அவசியமானதாகும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.  


கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இங்கிலாந்து அணியை பென் ஸ்டோக்ஸ் தனி நபராக தன்னால் முடிந்த வரை வலுவாக கட்டமைத்துள்ளார். மேலும், தற்போது முடிந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணியின் சார்பாக அவர் 110 ரன்கள் விளாசியுள்ளார். குறிப்பாக இறுதிப் போட்டியில் அணி தடுமாறிக்கொண்டு இருக்கையில் மிகவும் வலுவாக 49 பந்துகளில் 5 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 52 ரன்கள் விளாசி அணி வெற்றி பெறவும் கோப்பையை வெல்லவும் காரணமானார். மேலும் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், தொடர் முழுவதும் சேர்த்து ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.