சீனாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆசியன் கேம்ஸ் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசியன் பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இந்திய அணி தொடங்கியது முதலே சிறப்பாக ஆடி வருகிறது.


அங்கூர் தமாவுக்கு 2வது தங்கம்:


இந்த நிலையில், இன்று ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீரர்கள் உள்பட பல நாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்திய வீரரான அங்கூர் தமா போட்டி தொடங்கியது முதலே சிறப்பாக ஓடினார். அவர் 1500 மீட்டர் தூரத்தை 4 மீட்டர் 27 நிமிடம் 70 நொடிகளில் எட்டிப்பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.






முன்னதாக, அங்கூர் தமா ஆண்களுக்கான டி11 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார்.  நடப்பு ஆசிய பாரா கேம்ஸ் போட்டியில் இந்திய வீரர்கள் 34 பேர் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.


தொடரும் பதக்க வேட்டை:


சீனா பதக்கப்பட்டியலில் 67 தங்கங்கள், 53 வெள்ளி, 45 வெண்கலம் என 165 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. பதக்கப்பட்டியலில் இந்தியா தற்போது 10 தங்கம், 12 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களுடன் 5வது இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் ஈரான், மூன்றாவது இடத்தில் ஜப்பானும், 4வது இடத்தில் உஸ்பெகிஸ்தானும் உள்ளனர்.


வரும் 28-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள இந்த தொடரில் இந்தியா மேலும் பல பதக்கங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடர் தொடங்கியது முதலே இந்திய வீரர்கள் அபாரமாக ஆடி வருகின்றனர். இந்திய வீரர்கள் அங்கூர் தர்மா ஓட்டப்பந்தயத்திலும், நிஷத்குமார் உயரம் தாண்டுதலிலும், சைலேஷ்குமார் உயரம் தாண்டுதலிலும், பிரணவ் சூர்மா கிளப் த்ரோவிலு்ம தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.


தமிழக வீரர்கள்:


மேலும், ஆண்கள் உயரம் தாண்டுதலில் பிரவீன்குமாரும், குண்டு எறிதலில் நீரஜ் யாதவ்வும் தங்கம் வென்றுள்ளனர். மகளிர் பிரிவில் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லேகாரா துப்பாக்கிச் சுடுதலிலும், தடகளத்தில் தீப்தி ஜீவான்ஜியும்,  கனோவ் போட்டியில் பிராச்சி யாதவும் தங்கம் வென்றுள்ளனர்.


பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு ஆண்கள் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். மற்றொரு தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரரான முத்துராஜா குண்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.