ஒருநாள் உலகக் கோப்பை 2023ல் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படவில்லை. இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதிலும், குறிப்பாக உலகக் கோப்பையில் கத்துக்குட்டி அணியாக கருதப்படும் ஆப்கானிஸ்தான் அணியுடனும் தோல்வியை சந்தித்தது பாகிஸ்தான். 


இந்தநிலையில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு வரவில்லை என்றால் கேப்டன் பாபர் அசாம் மற்றும் துணை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லாவிட்டால் கேப்டன் பதவியை பாபர் அசாமிடம் இருந்து பறிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக்கி ஆர்தர், கிராண்ட் பிராட்பர்ன், மோர்னே மோர்கல், ஆண்ட்ரூ புட்டிக் மற்றும் மேலாளர் ரெஹான் உல் ஹக் ஆகியோரும் உலகக் கோப்பைக்கு பிறகு தங்கள் பதவியை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இரண்டில் மட்டுமே வெற்றி..


2023 உலகக் கோப்பையில் இதுவரை பாகிஸ்தான் 5 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி நான்கு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி இதற்கு பிறகு அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றால், மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இது தவிர, நிகர ரன் ரேட்டையும் மேம்படுத்த வேண்டும். மற்ற நான்கு அணிகளும் 14 புள்ளுகளை எட்டாமல் இருக்கவும் பாகிஸ்தான் அணியினர் பிரார்த்தனை செய்ய வேண்டும். 


தப்பிக்குமா கேப்டன் பதவி..? 


இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி ஏதாவது ஒரு அற்புதத்தை நிகழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினால் மட்டுமே பாபர் அசாம் கேப்டனாக நீடிப்பார் என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்றும் தெரிகிறது. 


உலகக் கோப்பைக்கு தனக்குப் பிடித்த அணியைத் தேர்வு செய்யும் முழு அதிகாரமும் பாபர் அசாமுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் இன்சமாம் உல் ஹக்கும் பாபரை முழுமையாக ஆதரவளித்து, அணியை தேர்வு செய்ய உதவினார். இதன்மூலம், பாபர் அசான் தனக்கு விருப்பமான 15 வீரர்களைக் கொண்ட குழுவைத் தேர்ந்தெடுத்திருந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த அணி அரையிறுதிக்கு செல்லவில்லை என்றால் கேப்டன் பதவியில் இருந்து விலக நேரிடும்.


முன்னதாக, பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பது கூடுதல் அழுத்தம் தருகிறதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பாபர் அசாம், “உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. இது கிரிக்கெட், இதில் எதுவும் நடக்கலாம். இறுதிவரை சிறந்த கிரிக்கெட்டை விளையாட பாகிஸ்தான் அணி வீரர்களாகிய நாங்கள் முயற்சிப்போம். உலகக் கோப்பையில் இன்னும் பல போட்டிகள் உள்ளன. இதற்கு பிறகு, அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற முயற்சிப்போம். தவறை திருத்திக் கொள்ள முயற்சிப்போம். கேப்டன் பதவியைப் பொறுத்தவரை, என் மீதும், எனது பேட்டிங்கிலும் அதிக அழுத்தம் இல்லை. நான் 100 சதவீதம் அதையே செய்கிறேன். நான் பீல்டிங் செய்யும் போது கேப்டன்சி பற்றி மட்டுமே யோசிப்பேன், பேட்டிங் செய்யும் போது அணிக்காக எப்படி ரன்களை எடுக்க வேண்டும் என்று யோசிப்பேன்.” என்று தெரிவித்தார்.