டி லா சாலே கிங்ஸ்கிரோவ் கிரிக்கெட் கிளப்பின் (De La Salle Kingsgrove CC) மூத்த வீரர் பால் காம்டன்.  இவர் ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னியில் உள்ள இந்த கிளப்பிற்காக தனது 1000-வது விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார்.


கிளப் கிரிக்கெட்:


கடந்த 1983 ஆம் ஆண்டு DLSKCC கிளப்பிற்காக கிரிக்கெட் விளையாட தொடங்கிய இவருக்கு தற்போது வயது 60.  கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலமாக அந்த கிளப்பிற்காக இவர் விளையாடி வருகிறார்.  சிட்னியில் உள்ள பீக்ஹர்ஸ்ட் பூங்காவில் கூகி பேவ் கிளப்பிற்கு எதிரான இறுதிப்போட்டி கடந்த வாரம் நடைபெற்றது.  இந்த போட்டியில்தான் இவர் தன்னுடைய 1000-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை செய்து இருக்கிறார்.  


முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டில் டி லா சாலே கிங்ஸ்கிரோவ் கிரிக்கெட் கிளப்பின் வாழ்நாள் உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். கடந்த 1987 ஆம் ஆண்டு Allwah Hunters கிளப்புக்கு எதிராக 30 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றியது மிகப்பெரிய சாதனையாக இருந்தது.


1000 விக்கெட்:


இச்சூழலில் தான் ஆயிரம் விக்கெட்டுகள் எடுத்து பற்றி பேசிய அவர், “நேராக பந்து வீச வேண்டும் என்று என் தந்தை என்னிடம் எப்போதும் கூறிக்கொண்டே இருப்பார்.  நான் வேகப்பந்து வீச்சாளர் கிடையாது. நான் பந்துகளை வேகமாகவெல்லாம் வீச மாட்டேன். நான் தற்போது 1000 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறேன். ஆனால், நான் இங்கு ஒரு உண்மையை பதிவு செய்து ஆக வேண்டும். நான் கடைசி 100 விக்கெட்டுகளை எடுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன்.


ஒரு கட்டத்தில் நான் விரக்தி அடைந்தேன். தொடர் முயற்சியால் இந்த சாதனையை செய்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார் பால் காம்டன். மேலும், “கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற போட்டியில்  Illawarra கத்தோலிக்க கிளப்பிற்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.


1000-வது விக்கெட்டை எடுத்ததை விட ஹாட்ரிக் விக்கெட் எடுத்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் என் உடல் ஒத்துழைக்கும் வரை விளையாடிக்கொண்டிருப்பேன். எனக்கு ஓய்வு பெறும் எண்ணம் எப்போதும் வந்தது கிடையாது” என்று கூறினார்.


இந்த கிளப்பிற்காக 1000 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர் இதுவரை 422 முறை போல்ட் செய்துள்ளார். அதேபோல், 458 முறை கேட்ச் மூலம் விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். மேலும், 113 முறை எல்பிடபூள்யூ எடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Most Runs in Every ODI World Cup: உலகக் கோப்பை! ஒவ்வொரு தொடரிலும் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் யார்? பட்டியல் இதோ!


மேலும் படிக்க: Raphael Dwamena Death: எமனாக மாறிய மாரடைப்பு! மைதானத்திலே பிரபல கால்பந்து வீரர் உயிரிழப்பு - ரசிகர்கள் சோகம்!