இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்டில்  இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. லார்ட்ஸில் நடந்த 3வது டெஸ்டில் இந்திய அணி போராடி தோற்றது. இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக தொடரில் இந்தியா 2-1 என்று பின்தங்கியுள்ளது.

அபிமன்யு ஈஸ்வரனை தெரியவில்லையா?

இந்த தொடரைப் பொறுத்தவரை இந்திய அணியின் பந்துவீச்சு பாராட்டும் அளவே உள்ளது. ஆனால், பேட்டிங்கில் சில இடங்கள் தடுமாற்றத்திலே உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் ஜெய்ஸ்வால், கில், கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட், ஜடேஜா என அனைவரும் பேட்டிங்கில் தங்கள் பங்களிப்பை அளித்து விட்டனர். கருண் நாயர் மட்டு்ம் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

இந்த நிலையில், கருண் நாயரின் இடத்தில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். சிலர் கருண் நாயருக்கு இன்னும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். கருண் நாயரா? சாய் சுதர்சனா? என்ற கேள்வியை மட்டும் முன்னிறுத்தி வருபவர்கள் கண்களுக்கு மற்றொரு வீரர் அபிமன்யு ஈஸ்வரன் தெரியாமல் இருந்து வருகிறார். 

மறுக்கப்படும் வாய்ப்பு:

ஒரு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் உள்பட இந்திய அணியைப் பொறுத்தவரை ரஞ்சியில் ஆடும் வீரர்களுக்கே பிரதான வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது ஐபிஎல் ஆடும் வீரர்களுக்கே வாய்ப்புகள் பிரகாசமாக வழங்கப்பட்டு வருகிறது. இது டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு இந்திய அணிக்கு சாதகமாக இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு பாதகமாகவே அமைந்துள்ளது. 

அந்த வரிசையில், ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடி தனது திறமையை வெளிக்காட்டியவர்தான் அபிமன்யு ஈஸ்வரன். அந்த அடிப்படையிலே அவருக்கு இந்திய அணியில் ஆஸ்திரேலிய தொடரில் இடம் வழங்கப்பட்டது. ரோகித் சர்மாவிற்கு மாற்று வீரராக அணிக்கு அழைக்கப்பட்ட அவர் களமிறக்கப்படவில்லை. தற்போது இங்கிலாந்து தொடரிலும் அணியில் சேர்க்கப்பட்ட அவர் பெஞ்சிலே உட்கார வைக்கப்பட்டுள்ளார். 

சதங்களும், ரன்களும்:

29 வயதான அபிமன்யு ஈஸ்வரன் இதுவரை 103 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 7 ஆயிரத்து 841 ரன்களை எடுத்துள்ளார். அதில் 27 சதங்கள், 31 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 233 ரன்கள் எடுத்துள்ளார்.  89 லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஆடி 3 ஆயிரத்து 857 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 9 சதங்கள், 23 அரைசதங்கள் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 149 ரன்கள் எடுத்துள்ளார். 34 டி20 போட்டிகளில் ஆடி 976 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 1 சதம், 5 அரைசதம் அடங்கும். 

ஒரு பேட்ஸ்மேனாக முழு திறமையையும் இந்திய மண்ணில் வெளிப்படுத்தியுள்ளார் அபிமன்யு ஈஸ்வரன். ஆனாலும், இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இதனால், அவருக்கு மான்செஸ்டர் மற்றும் ஓவலில் நடக்க உள்ள எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 

அசத்துவாரா?

இந்திய அணியில் டிராவிட், புஜாரா, ரஹானே, வாசிம் ஜாபர்,  லட்சுமணன் ஆகிய ஜாம்பவான் வீரர்களின் இடம் இந்திய அணியில் தற்போது வரை வெற்றிடமாகவே உள்ளது. இதனால், அவர்களுக்கு மாற்றாக ஒரு வீரரை உருவாக்க வேண்டியது அவசியம் ஆகும். அந்த வரிசையில்  ஒரு வீரராக அபிமன்யு ஈஸ்வரன் உருவெடுப்பாரா? என்பதற்கு அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். 

மிகுந்த எதிர்பார்ப்புடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குள் வந்த கருண் நாயர் இந்த தொடரில் 6 இன்னிங்சில் ஆடி ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதிகபட்சம் 40 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சாய் சுதர்சன் இளவயது என்பதால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் எதிர்காலத்தில் வழங்கப்படும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. 

இதனால், ஒரு முறை கூட வாய்ப்பு வழங்கப்படாத அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அபிமன்யு ஈஸ்வரனின் தந்தை ஒரு தமிழர் ஆவார். இவரது தாயார் ஒரு பஞ்சாபி ஆவார்.