கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தொடங்கி உலகக்கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. 


இதனிடையே, நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி சுற்றில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. அதேபோல், நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது சுற்றில் தென்னாப்பிரிக்க அணியுடன் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. முன்னதாக, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.


வான்கடே மைதானம் பிட்ச் ரிப்போர்ட்:


வான்கடே மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்பதை ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. குறிப்பாக இந்த உலகக் கோப்பையில் இங்கு நடைபெற்ற 2 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா முறையே 399, 382 ரன்கள் அடித்து நொறுக்கி வெற்றி கண்டதையும் மறக்க முடியாது.


 இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 256 ரன்களாக இருக்கிறது. எனவே இங்குள்ள பிட்ச் இப்போட்டியிலும் ஃபிளாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பேட்ஸ்மேன்கள் சிறிய பவுண்டரிகளை பயன்படுத்தி நிலையாக நின்றால் பெரிய ரன்களை எளிதாக அடிக்கலாம். அதனால் வேகம் மற்றும் சுழல் பந்து வீச்சாளர்கள் நல்ல லைன், லென்த்தை பின்பற்றினால் மட்டுமே விக்கெட்டுகளை எடுக்க முடியும்.


ஒரு நாள் போட்டிகள்:


வான்கடே மைதானத்தில் இதுவரை மொத்தம் 27 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 14 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 13 போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளன.


எத்தனை பார்வையாளர்கள் இருக்க முடியும்?


வான்கடே மைதானத்தில் சுமார் 32000 பார்வையாளர்கள் அமரும் வசதி உள்ளது. மும்பையில் இருப்பதால், ஐபிஎல் போட்டியின்போது அல்லது இந்திய கிரிக்கெட் அணி விளையாடும்போது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த மைதானத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்து விடும்.


உலக கோப்பையில் இந்தியா - நியூசிலாந்து இதுவரை:


இரண்டு வலுவான போட்டியாளர்களான இந்தியாவும் நியூசிலாந்தும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதியில் மோதுகின்றன. 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியிலும் இந்தியா, நியூசிலாந்து அணிகளே அரையிறுதிப் போட்டியில் மோதின. அப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.


இரு அணிகளும் ஐசிசி போட்டிகளில் 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, இதில் நியூசிலாந்து அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, அதேசமயம் இந்தியா 4 போட்டிகளில் வெற்றி பெற்றது, 1 ஆட்டம் சமநிலையில் முடிந்தது.


அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்:


வான்கடே மைதானத்தில் 50 ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்தவர் சச்சின் டெண்டுல்கர். இதுவரை இந்த மைதானத்தில் உலகக் கோப்பையில் 11 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ள அவர்  455 ரன்கள் எடுத்துள்ளார்.


அவர் வான்கடே மைதானத்தில் 41.36 சராசரியில் மூன்று அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்துள்ளார்.


அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்:


ஒருநாள் கிரிக்கெட்டில் வான்கடே மைதானத்தில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் வான்கடேவில் ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.