கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் நிறைவடைந்து நடை சாத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாசி மாதாந்திர பூஜைக்காக பிப்ரவரி 12 ஆம் தேதியில் சபரிமலை நடை திறக்கப்படவுள்ளது. சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற திருத்தலமாக கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கேரளத்தில் இருந்து மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, வடமாநிலங்கள் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கார்த்திகை மாதத்தில் வரும் மண்டல கால பூஜை, மகரவிளக்கு பூஜை காலத்தின்போது லட்சக்கணக்கிலான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வார்கள். சபரிமலை ஐயப்பன் சாமி கோவிலில் மண்டலகால பூஜைகள் கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கின. இதையொட்டி, நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பொதுவாக மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின்போது சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருப்பது வழக்கம்.
சபரிமலை சீசனின்போது கடந்த ஆண்டு ஒரே நேரத்தில் அதிக அளவிலான பக்தர்கள் குவிந்ததால் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த மண்டல காலத்தில் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஸ்பாட் புக்கிங் முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த முறை அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. முன்கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. தினந்தோறும் 80,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது. சபரிமலையில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி மண்டலவிளக்கு மற்றும் மகர விளக்கு பூஜைகள் தொடங்கியது. இதை அடுத்து இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 80 லட்சம் பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசித்துள்ளனர். கோவிலில் காணிக்கை, பிரசாதம் மற்றும் பிற வகைகளில் 440 கோடி ரூபாய் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருமானமாக கிடைத்துள்ளது. தொடர்ந்து மகர விளக்கு பூஜை நிறைவடைந்து கடந்த ஜனவரி 20ஆம் தேதி கோவில் நடை சாத்தப்பட்டது.
சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் மகரஜோதி தரிசனம் நிறைவடைந்த நிலையில் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி நடை சாத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாசி மாதாந்திர பூஜையையொட்டி பிப்ரவரி 12 ஆம் தேதி நடை திறக்கப்படவுள்ளது. பிப்ரவரி 12 முதல் பிப்வரி 17 ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும்.பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் இந்த நாட்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஐயப்பனை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் sabrimalaonline.org என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.