மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தங்க விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு பாலாலயம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 







உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில்

 

மதுரை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, மீனாட்சி அம்மன் கோயில் தான். மதுரை முழுவதும் பல இடங்களில் கோயில்கள் இருந்தாலும் மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்பே தனி தான். சிவபெருமான் தன் திருவிளையாடல் பலன்கள் நிகழ்த்தியது இந்த கோயிலை சுற்றி தான். ஓர் ஆண்டில் 274 நாட்கள் திருவிழாக்கள் நடக்கும் தலம் இதுதான். தமிழ் மாதங்கள் தோறும் திருவிழாக்கள் நடைபெறுவதால் மதுரைக்கு திருவிழா நகரம் என்றும் பெயர் உண்டு. இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட மீனாட்சியம்மன் கோயில் உலக பிரசித்தி பெற்றதாக உள்ளது. நவகிரகங்கள் புதன் தலம் இங்குதான். இங்கு வந்து அன்னையை வேண்டினால், திருமண வரன் கை கொடுக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் தங்க விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு பாலாலயம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
 




 

 





தங்க விமானங்கள், மற்றும் கோபுரங்களுக்கு இன்று பாலாலயம் நடைபெற்றது.




 




உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்று, 12 ஆண்டுகளானது. இந்தநிலையில் கோயில் வளாகத்தில்  தீ விபத்து  ஏற்பட்டு அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இதன் காரணமாக கும்பாபிஷேகம் ஆகமவிதிப்படி நடத்தபடவில்லை. இதையடுத்து கும்பாபிஷேகம் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக 5 கோபுரங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி  விமான பாலாலயம் நடைபெற்றது. இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக மீனாட்சி அம்மன் கோயிலின் தங்க விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு இன்று பாலாலயம் நடைபெற்றது.




 



பாலாலய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்



 

காலை விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், நான்காம் கால யாகபூஜை, த்ரவ்யாஹுதி, மஹாபூர்ணாஹுதி தொடர்ந்து மஹாதீபாராதனை, யாத்ராதானத்துடன் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர சுவாமி திருக்கோயில் கோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு பாலாலயம் விமர்சையாக நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாலாலயம் நிறைவு பெற்ற பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பாலாலய நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்றதால் மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் பாலாலய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.