அறிக்கை வழங்கும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.
 


மதுரை மத்திய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன், கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை தமது தொகுதியில் தான் நிறைவேற்றிய திட்டப்பணிகள் குறித்து செயல்பாட்டு அறிக்கையை தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்த்து வருகிறார். அதன் அடிப்படையில் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து தனது செயல்பாட்டு அறிக்கையை மதுரை மத்திய தொகுதி மக்களிடம் சமர்ப்பித்து வரும் அவர் 16 வது செயல்பாட்டு அறிக்கையினை சிம்மக்கல் அனுமார் கோவில் படித்துறை பகுதியில் வீடுகள் மற்றும் வணிக பெருமக்கள் முன்னிலையில் வழங்கினார். முன்னதாக  சிம்மக்கல் பகுதியில் உள்ள முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து செயல்பாட்டு அறிக்கை சமர்ப்பிக்கும் பணியை தொடங்கி வைத்தார். 

 


 


மக்களிடம் சமர்ப்பித்து வருகிறேன்.


 

தொடர்ந்து அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்...,” திமுக கழகத்தின் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக நியமிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் செய்ய போது மக்களிடம் வாக்குறுதி ஒன்றை கொடுத்தேன் அதில், என்னை தேர்ந்தெடுத்தால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என்னுடைய செயல்பாட்டு அறிக்கையை உங்களிடம் சமர்ப்பிப்பேன் என்று தெரிவித்திருந்தேன். சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் நான் மக்களுக்கு என்ன செய்திருக்கிறேன்  என்பதை  மக்களிடம் சமர்ப்பித்து வருகிறேன்.

 

மக்களுக்கு ஒரு தெளிவை கொடுக்கும் என நம்புகிறேன்

 

வேட்பாளராக முதல் நாள் கொடுத்த வாக்குறுதியை மறவாமல் மக்களிடம் அறிக்கையை  சமர்ப்பித்து வருகிறேன். அதில் இதுவரை நான் என்னென்ன செய்திருக்கிறேன்  என்பதை தெளிவாக மக்களிடம் வழங்கியுள்ளேன்.  எட்டு வருடம் முடிந்து  16வது அறிக்கையாக மக்களிடம் கொடுத்திருக்கிறேன். இது மக்களுக்கு ஒரு தெளிவை கொடுக்கும் என நம்புகிறேன்" என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, மாமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி ராஜேந்திரன், விஜயா குரு, கார்த்திக் பகுதி செயலாளர்கள் சரவண பாண்டியன், சு. பா. கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.