Kandha Sashti Viratham 2024: தமிழ்க்கடவுளால் பக்தர்களால் போற்றப்படுபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானுக்கு மிக உகந்த நாட்களில் ஒன்றாக இருப்பது சஷ்டி. மாதந்தோறும் இரு சஷ்டி வந்தாலும் ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி மகா கந்தசஷ்டியாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்ததது இந்த கந்த சஷ்டியில் நிகழ்ந்ததால் இந்த சஷ்டியை பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். பொதுவாக, சஷ்டி நாட்களில் பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கம் ஆகும்.
கந்த சஷ்டி விரதம்:
நடப்பாண்டிற்கான சஷ்டி திருவிழா வரும் நவம்பர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறத. இந்த சஷ்டி திருவிழா வரும் நவம்பர் 7ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த சஷ்டிக்கு பக்தர்கள் விரதம் இருப்பது எப்படி? என்று கீழே விரிவாக காணலாம்.
- தினமும் ஒரு இளநீரை மட்டும் உணவாக எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.
- சஷ்டி திருவிழா கொண்டாடப்படும் ஆறு நாட்களுக்கு வெறும் தண்ணீரை மட்டும் உணவாக எடுத்துக் கொண்டு விரதமாக இருக்கலாம்.
- இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்கப்படும் பால், பழங்களை மட்டும் உணவாக எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.
- இரண்டு வேளை உணவு எடுத்துக் கொண்டு ஒரு வேளை உணவு தவிர்த்து விரதம் இருக்கலாம்.
- இருவேளை உணவு தவிர்த்து விட்டு ஏதாவது ஒரு வேளை உணவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
- சூரசம்ஹாரம் மட்டும் முழு நாளும் உணவு எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருந்து மாலையில் சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு உணவு எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
விரதம் கட்டாயமா?
எந்த ஒரு இறைவனுக்கும் பக்தர்கள் தமது பக்தியை காட்டுவதற்காக விரதம் கட்டாயமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உள்ளத்தூய்மையே உண்மையான பக்தி என்றே அனைத்து போதனைகளும் உணர்த்துகிறது.
தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கமாக உள்ளது. உடல்நலக்குறைவு உள்ளவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் கட்டாயம் விரதம் இருக்க வேண்டியது அவசியம் கிடையாது.
மிளகு விரதம் என்றால் என்ன?
முருகனை வேண்டி கந்த சஷ்டி திருவிழாவிற்காக இருக்கப்படும் விரதங்களிலே மிகவும் கடுமையான விரதம் மிளகு விரதம் ஆகும். பெரும்பாலும் குழந்தை வரம் வேண்டி இருப்பவர்கள் இந்த விரதத்தை இருப்பது வழக்கம். மிளகு விரதமானது முதல் நாளில் 1 மிளகு மட்டும் சாப்பிடுவது, 2வது நாளில் இரண்டு மிளகு சாப்பிடுவது, 3வது நாளில் 3 மிளகு சாப்பிடுவது என படிப்படியாக ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே செல்வது ஆகும்.
கந்த சஷ்டியை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படுவது வழக்கம் ஆகும். கந்த சஷ்டியை முன்னிட்டு கோயில்களில் தற்போது இருந்தே அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.