GST Exemption: மருத்துவ காப்பீடு மீதான வரியை விலக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


ஜிஎஸ்டி வரி விலக்கு:


மூத்த குடிமக்களுக்கான டேர்ம் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகள் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியங்களுக்கு விரைவில் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பொது மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலான இந்த வரிக் குறைப்பிற்கு, மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய குழுவில் (GoM) உள்ள பெரும்பாலனோர் ஆதரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி தாக்கங்கள் குறித்து விவாதிக்க அமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) சனிக்கிழமை கூடியது. இதில் மூத்த குடிமக்களைத் தவிர்த்து தனிநபர்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான உடல்நலக் காப்பீட்டுத் தொகைக்கான பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் என்று முன்மொழிந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், 5 லட்சத்துக்கும் அதிகமான கவரேஜுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


மாநில நிதியமைச்சர்களை உள்ளடக்கிய மற்றும் மத்திய நிதியமைச்சர் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில், அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கான ஜிஎஸ்டி குறித்து இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம்:


GST விகிதத்தை மேம்படுத்துவதற்கான மற்றொரு தனி அமைச்சர்களின் கூட்டத்தில், பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை திருத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, பேக் செய்யப்பட்ட குடிநீர், சைக்கிள்கள், பயிற்சி நோட்டுபுத்தகங்க, ஆடம்பர கடிகாரங்கள் மற்றும் காலணிகள் உட்பட பல்வேறு பொருட்களின் மீதான வரி விகிதங்களில் மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 


மேற்கொள்ளப்பட உள்ள "வர் விதிப்பு சீர்திருத்த நடவடிக்கையானது மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் ரூ. 22,000 கோடி வருவாய் ஈட்ட உதவும். இது காப்பீட்டு பிரீமியங்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைப்பதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய உதவும்" என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் (20 லிட்டர் மற்றும் அதற்கு மேல்) மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க GoM பரிந்துரைத்தது. ஒப்புதல் அளிக்கப்பட்டால், 10,000 ரூபாய்க்கும் குறைவான விலையுள்ள சைக்கிள்கள் மற்றும் பயிற்சி குறிப்பேடுகள் மீதான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிமாக குறைக்கப்படும். அதேநேரம், ரூ.15,000க்கு மேல் விலையுள்ள காலணிகள் மற்றும் ரூ.25,000க்கு மேல் உள்ள கைக்கடிகாரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதமாக அதிகரிக்கப்படலாம்.


அமைச்சர்கள் குழு:


வரி விகிதங்களை நிவர்த்தி செய்ய கடந்த மாதம் உருவாக்கப்பட்ட 13 உறுப்பினர்களைக் கொண்ட GoM இன் தொடக்கக் கூட்டம் இதுவாகும். இந்தக் குழுவில் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளனர். அக்டோபர் இறுதிக்குள் அதன் அறிக்கையை ஜிஎஸ்டி கவுன்சிலில் சமர்ப்பிக்க பணிக்கப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில், ஜிஎஸ்டி வருவாயில் ரூ.8,262.94 கோடியை ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்திலும், ரூ.1,484.36 கோடி ஹெல்த் ரீ இன்சூரன்ஸ் பிரீமியத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈட்டியுள்ளன. 


அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரிக் குறைப்பினால் ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை ஈடுகட்ட,  பானங்கள் போன்ற பொருட்களின் மீதான வரி விகிதங்களை உயர்த்துவது குறித்து GoM ஆலோசித்து வருகிறது. தற்போது, ​​ஜிஎஸ்டி 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம் மற்றும் 28 சதவிகிதம் என்ற விகிதங்களுடன் நான்கு அடுக்கு அமைப்பில் செயல்படுகிறது. இதில் அத்தியாவசியப் பொருட்களுக்கு குறைந்த விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆடம்பர பொருட்கள் அதிக வரிகளை எதிர்கொள்கின்றன.