மயிலாடுதுறை மேம்பாலத்தில் 3 இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான நிலையில் அவ்வழியாக சென்ற மாவட்ட ஆட்சியர் துரிதமாக செயல்பட்டு படுகாயம் அடைந்த 3 பேரை தன்னுடைய வாகனத்தில் அழைத்துச் சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயிலடி மேம்பாலத்தில் இருந்து சித்தர்காடு செல்லும் இறக்கத்தில் இன்று மூன்று இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த எல்ஐசி முகவரான வெங்கட்ரமணன், கூறைநாட்டைச் சேர்ந்த சுகுமார் என்ற 23 வயது இளைஞன் மேலும், ஒரு நபர் ஆகிய மூன்று பேர் காயம் அடைந்து கீழே விழுந்தனர்.
PM Modi Tejas: தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
இதில் அடையாளம் தெரியாத நபர் சுயநினைவு இல்லாத நிலைக்கு சென்றார். ஒருவருக்கு காலில் லேசான முறிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக குத்தாலம் நோக்கி சென்று கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு, ஆம்புலன்ஸ் வருவதற்கு நேரமாகும் என்பதால் தன்னுடன் வந்த அலுவலக வாகனத்தில் விபத்து ஏற்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு அதே காரில் தானும் பயணம் செய்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். மூன்று பேருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு நபருக்கு நினைவு திரும்பாத காரணத்தால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
அவருடைய பெயர் விபரம் இதுவரை தெரியவில்லை, இச்சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆய்வு சென்ற மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் மகாபாரதி வழியில் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு வாகனத்தில் ஏற்றி சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த செயலை பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.