மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் 2023 கணக்கெடுப்பு விழிப்புணர்வு கையெழுத்துப் பேரணி மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுத்தல் குறித்த விழிப்பணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணர்வு கையெழுத்திட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகை திட்டங்கள் குறித்து நாட்டுப்புற கலைஞர்கள் நடத்திய நாடக கலைநிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஆட்சியர் பார்வையிட்டார்.
நாடக கலைஞர்கள் பொதுமக்களுக்கு புரியும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் 2023 கணக்கெடுப்பு விழிப்புணர்வு அரசு திட்டங்களை, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி முன்னிலையில் நடத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றனர். அரசின் திட்டங்களை நாடக வாயிலாக காட்சிபடுத்திய நாட்டுப்புற கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வாழ்த்து தெரிவித்து கௌரவித்தார்.
தொடர்ந்து சமூக பாதுகாப்புத் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தேசிய குழந்தைகள் தினம், சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கும் விழிப்புணர்வு நடைபயண பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவங்கி வைத்தார்.
பறை இசை, பெண்தெய்வம் வேடமணிந்து நடன நிகழ்வுடன் உருமி மேளம் முழங்க மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள், ’பெண் குழந்தையின் நலமே நாட்டின் பலம், குழந்தைகளை வேலைக்கு அனுப்பாதே, ஆண், பெண் குழந்தை சமநிலையை உறுதியேற்போம், தவறான தொடுதலை அனுமதிக்காதே, பாலியல் எண்ணங்களுடன் பார்க்காதே, பெண் பாதுகாப்பை உறுதி செய்வோம்’ போன்ற விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி நடை பயண பிரச்சாரம் மேற்கொண்டனர்.
பேரணி, நகரின் முக்கிய வீதிகளில் வழியாக சென்று தியாகி ஜி நாராயணசாமி நகராட்சி மேல்நிலை பள்ளி அருகே நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், வினோதினி, உமா, நன்னடத்தை அலுவலர் வெங்கட்ராமன், தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.