பாலஸ்தீனம் மீது அத்துமீறிய பயங்கரவாத தாக்குதல் நடத்தும் இஸ்ரேலையும், அதற்கு துணைபோகும் மத்திய அரசையும் கண்டித்து மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு, ஜமாத்துல் உலமா சபை சார்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, கூட்டமைப்பின் தலைவர் அப்துல் சாதிக் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் ஹாஜாகனி, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, எஸ்டிபிஐ மாநில பேச்சாளர் ஆரிஃபின், தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அலாவுதீன், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழக தலைமை பேச்சாளர் திருச்சி ஜாகிர், இந்திய தேசிய லீக் பொதுச்செயலாளர் அப்துல்காதர், தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மன்சூர்காசிபி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். 




மேலும், பெண்கள் உள்ளிட்ட 2,000 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, செல்போன் டார்ச் லைட்டை ஒளிரச் செய்து தங்களது கண்டனத்தை முழக்கமாக பதிவு செய்தனர். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “22 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் இந்த நெடிய போர்  மூலம் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. 37 மருத்துவமனை, அகதிகள் முகாம், ஆம்புலன்ஸ்களை இஸ்ரேல் தாக்கி அளித்துள்ளது. 4000 மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளது. மோசமான போர் குற்றத்தை இஸ்ரேல் செய்துள்ளது.




இதற்காக உலகம் முழுவதிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு தரப்பட்ட மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே மயிலாடுதுறையில் இஸ்ரேலின்  போர் குற்றங்களுக்கு எதிராக இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இந்திய திருநாடு காந்தியடிகளின் வழியில் ஈடுபட்டு அங்கு நிரந்தர போர் நிறுத்தத்தை உருவாக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த இந்தியர்களும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நின்று கொண்டு இருக்கிறார்கள், அந்த மக்களின் உணர்வுகளை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். 




சேரி மொழி என்ற வார்த்தையை பயன்படுத்தி நடிகை குஷ்பூ தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எளிய மக்களை கிண்டல் செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழ்நாட்டில் வாழக்கூடிய மக்கள் ஒவ்வொரு பகுதிகளும் ஒவ்வொரு விதமான தமிழ் மொழியை அவர்களுக்கு உரிய ஸ்லாங்கில் பேசி வருகின்றனர். இதனை ஒரு குறிப்பிட்ட சமூகத்தோடு இணைத்து பேசும் விதத்தில் குஷ்பூ கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக கவர்னராக இருக்கக்கூடிய ஆர்.என்.ரவி தன்னை ஒரு அமெரிக்கா ஜனாதிபதியாக நினைத்து கொண்டிருக்கிறார். ஒன்றிய அரசின் பிரதிநிதியாக தமிழ்நாட்டில் இருப்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கக் கூடிய வகையில், தமிழ்நாடு அரசோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே எங்களின் விருப்பம், இதற்கு முன் இருந்த கவர்னர்கள் தமிழக அரசோடு சின்ன சின்ன விவகாரங்களில் முரண்பட்டு இருக்கலாம்.




பெரும்பாலும் மாநில அரசோடு உடன்பட்டே பயணித்து இருக்கிறார்கள். இந்தியா முழுக்க தேர்வு செய்யப்பட்ட ஜனநாயக அரசுக்கு ஆதரவாகதான் ஆளுநர் இருக்க வேண்டும், எந்த அரசு எந்த கட்சியாக வேண்டுமானாலும் இருக்கலாம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரக்கு கவர்னர் ஒத்துழைப்பு தரவேண்டும், அந்த அரசு தவறு செய்யும் போது உரிய வகையில் அழைத்து பேசி வேண்டும் அதுதான் ஜனநாயகம், சுதந்திரப் போராட்ட வீரர் தமிழ்நாட்டில் எல்லா தரப்பு மக்களாலும் மரியாதை கொடுக்கப்பட்டவர் சங்கரய்யா அவருக்கு மதிப்பீடு முனைவர் பட்டம் அளிப்பதற்கு தடையாக இருப்பது என்ன நியாயம்? இதுபோன்ற தவறுகளை செய்யாமல் தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவுக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், இனியும் காலம் தாழ்த்தக்கூடாது, உச்ச நீதிமன்ற அறிவுரையை கவர்னர் மதிக்க வேண்டும்” என்றார். மேலும் இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் ஹாஜா கனியும் தனது கண்டனத்தை செய்தியாளர்களிடம் பதிவு செய்தார்.