PM Modi Tejas: தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த அனுபவத்தை பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


தேஜஸில் பறந்த பிரதமர் மோடி:


பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு சென்ற பிரதமர் மோடி,  அங்கு தயாரிக்கப்படும் போர் விமானங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது,  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் ஏறி பயணம் செய்தார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “தேஜஸ் விமானத்தில் ஒரு பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு என்னை செழுமைப்படுத்தியுள்ளது. நமது நாட்டின் பூர்வீக திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது. மேலும் நமது தேசிய திறனைப் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்தது” என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.






 


அதோடு, விமானப்படை வீரர்களுக்கான சீருடையை அணிந்துகொண்டு நடப்பது, தேஜாஸ் விமானத்தின் அருகில் நின்று கொண்டிருப்பது, அந்த விமானத்தில் அமர்ந்தவாறு வெற்றிச் சின்னம் காட்டுவது போன்று தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அந்த பதிவில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் தேஜஸ் விமானத்தில் பிரதமர் பயணித்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம்:


பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம், ராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள், இலகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்களை தயாரித்து வடிவமைத்து வருகிறது. இந்நிலையில், 12 Su-30MKI ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான  பணிகளை ஆய்வு செய்ய சென்றபோது தான், பிரதமர் மோடி தேஜஸ் விமானத்தில் பயணம் செய்தார். 


தேஜஸ் விமானம்:


தேஜாஸ் அதிகபட்சமாக 4000 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது. இது ஒரு பைலட் ஒற்றை இன்ஜின் விமானமாகும். அதிகபட்சமாக 13,300 கிலோ எடை கொண்டது. இது Mach 1.8 இன் அதிகபட்ச வேகத்தில் செல்ல முடியும். இது 850 கிமீ பொது வரம்பையும், 500 கிமீ போர் வரம்பையும் கொண்டுள்ளது. தேஜாஸ் எளிமையான வடிவமைப்பு கொண்ட குறைந்த விலை விமானம். எனவே, ஆசியாவில் உள்ள செலவின உணர்வுள்ள நாடுகளுக்கு இது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. இருப்பினும் பெரும்பாலும் உள்நாட்டு உபயோகித்திற்காக மட்டுமே தேஜஸ் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது மார்க் 1, மார்க் 1A மற்றும் பயிற்சியாளர் பதிப்பு என வேரியண்ட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.  புதிய அதிவேக வேரியண்டான தேஜாஸ் மார்க் 2,  2026 ஆம் ஆண்டிற்குள் தொடர் தயாரிப்புக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.