சீர்காழி சட்டநாதர் கோயில் ஆலயத்தின் அருகிலேயே பெட்டகம் அமைத்து கோயிலில் கிடைத்த சிலைகள் மற்றும் செப்பேடுகளை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சீர்காழி சட்டநாதர் ஆலய கும்பாபிஷேகத்தின் போது பூமிக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சுவாமி சிலைகள் மற்றும் செப்பு பட்டயத்தில் எழுதப்பட்ட தேவார பதிகங்களை அரசு கையகப்படுத்துவதற்கான கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் சிலை ஆலயத்தின் அருகிலேயே பெட்டகம் அமைத்து பாதுகாக்க வேண்டும் என கூறி அரசு கையகப்படுத்துவதற்கு பலத்த எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த மே 24 -ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான யாகசாலை அமைக்க கடந்த மே மாதம் 16 - ஆம் தேதி கோயில் வளாகத்தில் ஒரு பகுதியில் மண் எடுப்பதற்காக குழி தோண்டிய போது அங்கு பழமை வாய்ந்த 23 ஐம்பொன் சிலைகள், பூஜை பொருட்கள் மற்றும் 413 முழுமையான தேவார பதிகம் பதித்த செப்பேடுகள், 83 சேதமடைந்த செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவற்றை கோயில் வளாகத்திலேயே பாதுகாப்பு அறையில் ஏற்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
பழமை வாய்ந்த புனிதமான இந்த பொருட்களை அரசு கையகப்படுத்துவது தொடர்பான பொதுமக்கள் கருத்து கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது ராஜ கணேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தருமபுரம் ஆதீன பிரதிநிதிகளாக பொது மேலாளர் ரங்கராஜன், கோயில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி, மேலாளர் சேதுமாணிக்கம், சட்டநாதர் கோயில் காசாளர் செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் கூட்டத்தில் அதிமுக, பாஜக, சீர்காழி தமிழ்ச் சங்கம் திருக்கோயில் திருமணங்கள் பாதுகாப்பு பேரவை மற்றும் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
அப்போது அவர்கள் அரசு தொன்மையான சீர்காழி கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன்னால் ஆன தெய்வத்திருமேனிகள் மற்றும் தேவார பதிகங்கள் பதிக்கப்பட்ட செப்பேடுகளை அரசு கையகபடுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். தெய்வ சிலை மற்றும் செப்பேடுகளை அடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் கோயில் வளாகத்திலேயே பெட்டகம் அமைத்து பாதுகாக்க வேண்டும். பாதுகாப்பு பெட்டகம் அமைப்பதற்கான செலவு தொகையினை தருமபுரம் ஆதீனமே வழங்க உத்தரவாதம் அளித்துள்ளார் என தெரிவித்தனர்.
இவை அனைத்தும் ஆலய வளாகத்திற்குள் கிடைத்த காரணத்தால் ஆலயத்திற்குள்ளேயே பாதுகாப்பு பெட்டகம் வைத்து பொதுமக்கள் வழிபடுவதற்கும் சீர்காழி வரலாற்றை தெரிந்து கொள்வதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் கோயில் அருகிலேயே கண்டெடுக்கப்படும் சிலைகளை பல்வேறு இடங்களில் கோயிலுக்கே வழங்கியதன் ஆவணங்களை இந்து அமைப்புகள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.