குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் குறுவை தொகுப்பு திட்டம் நடப்பாண்டும் செயல்படுத்தப்பட்டதால் வழக்கத்தை விட கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. காவிரியில் கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகிவிட்டன.




எஞ்சிய குறுவை பயிரை பாதுகாத்திடவும், சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்கிடவும் தமிழ்நாட்டுக்கு, கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய காவிரி நீரை வழங்க வலியுறுத்தியும் காவிரி டெல்டா மாவட்டங்களில் பலகட்டப் போராட்டங்கள் நடந்தது. தற்போது கர்நாடக அணைகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீர் உள்ள நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என கர்நாடகத்தில் இரண்டு முறை முழு அடைப்பு போராட்டத்தை பாஜக மற்றும் கன்னட அமைப்புகள் நடத்தின.




இந்நிலையில்  காவிரி டெல்டா மாவட்டங்களில் மீதியுள்ள குறுவைப் பயிரை பாதுகாக்கவும், சம்பா சாகுபடி தொடங்கவும் உடனடியாக காவிரியில் மாத வாரியாக கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஒருநாள் முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது என  முடிவு செய்யப்பட்டது.




அதற்காக  இன்று நடைபெறும் கடையடைப்பு மற்றும் மாபெரும் மறியல் போராட்டத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில்  போராட்டம் குறித்து இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த  செப்டம்பர் 7 ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில்  ஆகஸ்ட் 11-ஆம் தேதி கடையடைப்பு செய்து தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என மயிலாடுதுறையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.




திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா.முருகன்  எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என கர்நாடகத்தில் போராட்டத்தை தூண்டிவிட்டு போராட்டம் நடத்திவரும் பாஜகவை கண்டித்தும், எஞ்சிய குறுவைப் பயிர்களைப் பாதுகாத்திடவும், சம்பா சாகுபடியை தொடங்கிட தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட வலியுறுத்தியும், தமிழக அரசு பலமுறை வலியுறுத்தியும் பாராமுகமாக செயல்படும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடையடைப்பு நடத்துவது என்றும்,




அன்றைய தினம் மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாவட்ட கர்நாடக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் காவிரி படுகை பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.  மயிலாடுதுறை மாவட்டத்தில் கடையடைப்புப் போராட்டம் காரணமாக 10,000 கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.